உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாகவே உள்ளன. 

சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, நீண்ட அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்கள் முதல் இளம் திறமைகள் வரை நல்ல கலவையிலான திறமைகளை உள்ளடக்கியுள்ளது. பாகிஸ்தான் அணிக்காக 1999ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் ஷோயப் மாலிக், இந்த உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டு காலம் அனுபவம் உடைய அவரது இருப்பு அணிக்கு வலுசேர்க்கும். 

இக்கட்டான சூழலில் ஆட்டத்தை அருமையாக எடுத்துச்சென்று பல போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர். அவருக்கு அடுத்து அணிக்கு வந்த பல வீரர்கள் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், 20 ஆண்டுகளாக ஆடிவருகிறார் மாலிக். அணியில் அவரது இருப்பு பாகிஸ்தான் அணிக்கு பலமாக அமையும். அதேபோல மற்றொரு அனுபவ ஆல்ரவுண்டரான முகமது ஹஃபீஸும் அணியில் உள்ளார்.

இந்நிலையில், இந்த உலக கோப்பைதான் தனது கடைசி உலக கோப்பை தொடர் எனவும் அதனால் இந்த உலக கோப்பையை பாகிஸ்தான் அணிக்கு வென்றுகொடுக்கும் முனைப்பில் உள்ளதாகவும் மாலிக் தெரிவித்துள்ளார். 37 வயதான மாலிக், இந்த உலக கோப்பையுடன் ஓய்வுபெற்றுவிடுவார் என்று தெரிகிறது. இதுதான் அவருக்கு கடைசி உலக கோப்பை என்பது தெரிந்த விஷயம்தான்.  ஆனால் இந்த தொடருடன் ஓய்வுபெற்றுவிடுவார் என்றே தெரிகிறது.