பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான ஷோயப் மாலிக் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பாகிஸ்தான் வீரர்கள் மரியாதையுடன் பிரியாவிடை அளித்தனர். 

பாகிஸ்தான் அணியில் 1999ம் ஆண்டு அறிமுகமான ஷோயப் மாலிக், 20 ஆண்டுகால நீண்ட அனுபவம் கொண்டவர். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மாலிக், டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் கோலோச்சினார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஜொலித்தார். 

35 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள மாலிக், 285 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7534 ரன்களை குவித்துள்ளார். இந்த உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலும் ஷோயப் மாலிக் இடம்பெற்றிருந்தார். இந்த உலக கோப்பையில் 4 போட்டிகளில் மட்டுமே ஆடினார். 

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து டக் அவுட்டானதால் அதன்பின்னர் ஆடிய போட்டிகளில் மாலிக் நீக்கப்பட்டார். வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 11 புள்ளிகளை பெற்றிருந்தாலும் நெட் ரன்ரேட்டில் நியூசிலாந்தை விட பின் தங்கியிருப்பதால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. 

இந்நிலையில், ஏற்கனவே உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த மாலிக், அதேபோலவே ஓய்வு பெற்றார். இந்தியாவுக்கு எதிராக அவர் ஆடியதுதான் அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி போட்டி. அனைத்து வீரர்களும் மாலிக்கிற்கு மரியாதையுடன் பிரியாவிடை அளித்தனர். 20 ஆண்டுகால மாலிக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மாலிக், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.