இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளை இங்கிலாந்து வென்றது. 

நான்காவது போட்டி நாட்டிங்காமில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, பாபர் அசாமின் அபார சதம், ஹஃபீஸ், ஃபகார் ஜமான் மற்றும் ஷோயப் மாலிக்கின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவர் முடிவில் 340 ரன்களை குவித்தது. 

341 ரன்கள் என்ற இலக்கை ஜேசன் ராயின் அதிரடி சதம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி ஓவரில் எட்டி இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரை வென்றது. 

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக், ஹிட் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த ஷோயப் மாலிக், மார்க் உட்டின் பந்தை லேட் கட் ஷாட் அடிக்க நினைத்து பேட்டை நேரடியாக ஸ்டம்பில் அடித்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் குறைந்தது. அவர் 47வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பிறகு 20 பந்துகளில் பாகிஸ்தான் வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

1999ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக ஆடிவரும் 20 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மாலிக், உலக கோப்பை அணியில் கூட இடம்பெற்றிருக்கிறார். அப்படியிருக்கையில், ஹிட் அவுட் முறையிலா அவுட்டாவது..? அந்த வீடியோ இதோ...