உலக கோப்பை தொடரை படுமோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் மீண்டெழுந்து அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதன்பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக  தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அள்ளி தூற்றினர். அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வென்றது. பாகிஸ்தான் அணி தொடர் வெற்றிகளை பெற்ற அதேவேளையில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றது. 

பாகிஸ்தான் அணி 7 போட்டிகளை ஆடியுள்ள நிலையில், 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சிய 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில் எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியோ, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய வலுவான அணிகளை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து அணி தோற்றால், பாகிஸ்தான் அணி இரண்டிலும் வென்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

எனவே இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கிண்டலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அக்தர், பாகிஸ்தான் அணி நல்ல கம்பேக் கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு இந்திய அணி தான் உதவ வேண்டும். இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தினால் இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறிவிடும். பாகிஸ்தான் எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு வந்துவிடும். அதற்கு இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி உதவ வேண்டும் என்று அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.