டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என்றும் அதில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்றும் ஷோயப் அக்தர் ஆருடம் தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால், இரு அணிகளும் மோதவுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால், டி20 உலக கோப்பையில் மோதவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக திகழ்கின்றன. முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளையும் ஆருடங்களையும் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ஷோயப் அக்தர், டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும். அதில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும். ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு பழக்கப்பட்டதால், அது இந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று ஷோயப் அக்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.