சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த மற்றும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களில் முக்கியமானவர்கள் பாகிஸ்தான் பவுலர்களாக இருப்பார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட், பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொடுத்துள்ளது. 

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், அப்துல் காதிர், முகமது சமி, முகமது ஆசிஃப், முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஜுனைத் கான் ஆகிய அனைவருமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள். ஆனாலும் இவர்களில் நீண்டகாலம் ஆடி, பாகிஸ்தான் அணிக்காக அதிகமான பங்காற்றியது வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் அக்தர் தான். 

ஆசிஃப், சமி ஆகியோர் எல்லாம் நீண்டகாலத்திற்கு, அணியின் நிரந்தர பவுலர்களாக நிலைக்கவில்லை. ஆனால் அவர்களும் தரமான பவுலர்கள். அதுதொடர்பான ஒரு நிகழ்வைத்தான் அக்தர் பகிர்ந்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கருடன் ஷோயப் அக்தர் உரையாடினார். அப்போது, பவுலிங்கில் அந்த துல்லியம், உங்களுக்கு இயல்பாகவே இருந்ததா? அல்லது பயிற்சியின் மூலம் பெற்றீர்களா? என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கேட்டார். 

அதற்கு பதிலளித்த அக்தர், பவுலிங்கின் அடிப்படை திறமை என்பது இயல்பாகவே வருவது. முகமது சமி மற்றும் முகமது ஆசிஃபை எடுத்துக்கொள்ளுங்கள்.. அவர்கள் இருவரும் நீண்டகாலம் கிரிக்கெட் ஆடியிருந்தால், அனைத்துவிதமான பந்துகளையும் வீசியிருப்பார்கள்.

நான் பந்துவீசி இந்த உலகம் அதிகமாக பார்த்திருக்கிறது. ஆனால் பந்துவீசும் கலையை தெரிந்துகொள்ள வேண்டுமானால், முகமது ஆசிஃபின் பவுலிங்கை பாருங்கள். 2006 கராச்சி டெஸ்ட்டில், விவிஎஸ் லட்சுமணனை விரக்தியடைய செய்துவிட்டார் ஆசிஃப். ஆசிஃப் வீசும் பந்துகளை லட்சுமணனால் கணிக்கவே முடியவில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் திணறினார் லட்சுமணன்.

ஆசிஃபின் பந்தில் டிவில்லியர்ஸின் நிலையும் அதேதான். எனவே பவுலிங் கலை என்பது இயல்பான திறமையையும் உள்ளடக்கியதுதான். பவுலிங்கில் துல்லியத்தை வேண்டுமானால், பயிற்சியின் மூலம் பெற முடியும். ஆனால் சாமர்த்தியமான பவுலிங் என்பது இயல்பாகவே வர வேண்டும். பயிற்சியின் மூலம் பெற முடியாது என்று அக்தர் தெரிவித்தார். 

அக்தர் சொன்ன அந்த குறிப்பிட்ட கராச்சி டெஸ்ட்டில் இந்திய அணி 341 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. அதற்கு முக்கிய காரணம் முகமது ஆசிஃபின் அபாரமான பவுலிங் தான். அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் என மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முகமது ஆசிஃப். அந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான லட்சுமணனை ஆசிஃப் தான் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் ஆசிஃபின் பந்தில் 19 ரன்களில் ஆட்டமிழந்த லட்சுமணன், இரண்டாவது இன்னிங்ஸில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் ராகுல் டிராவிட்டையும் ஆசிஃப் தான் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் முகமது ஆசிஃப், பாகிஸ்தான் அணிக்காக நீண்டகாலம் ஆடவில்லை. 2005ம் ஆண்டிலிருந்து 2010 வரையிலான 5 ஆண்டுகள் மட்டுமே ஆடினார். 22 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் மட்டுமே முகமது ஆசிஃப் ஆடினார்.