இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த நிலையில், 2000ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, இளம் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து, சர்வதேச அரங்கில் இந்திய அணியை தலைநிமிரவைத்தவர். 

கங்குலி இனம்கண்டு இந்திய அணியில் வாய்ப்பளித்த சேவாக், யுவராஜ், தோனி, ஹர்பஜன், ஜாகீர் கான், கைஃப் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலத்திற்கு டாப் வீரர்களாக ஜொலித்தனர். இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியவர் கங்குலி. கங்குலி ஒரு சிறந்த கேப்டன் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. 

இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு வீரராகவும் கேப்டனாகவும் அளப்பரிய பங்காற்றிய கங்குலி, பிசிசிஐயின் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். இதற்கான விண்ணப்பத்தை அவர் தாக்கல் செய்தார். அவரைத்தவிர பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை. ஒருமனதாக பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி, வரும் 23ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், கங்குலிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தரும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கங்குலியை வெகுவாக புகழ்ந்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். 

கங்குலி குறித்து பேசியுள்ள அக்தர், இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் கங்குலி. 1997-98க்கு முன்பு இந்திய அணியால் பாகிஸ்தானை வீழ்த்த முடியும் என்று நான் நினைத்தே பார்த்ததில்லை. கங்குலி இந்திய அணியின் கேப்டனாகும் வரை, பாகிஸ்தானை வீழ்த்துமளவிற்கு இந்திய கிரிக்கெட் சிஸ்டம் இல்லை என்றுதான் நினைத்தேன். இந்திய கிரிக்கெட்டின் மனநிலையை மாற்றியதே கங்குலிதான். இந்திய கிரிக்கெட்டிற்கு வேறு பரிமாணம் கொடுத்தார் கங்குலி. இளம் திறமைகளை கண்டறிவதில் ஆர்வம் காட்டினார். 

கங்குலி ஒரு சிறந்த தலைவர். திறமையான வீரர்களை கண்டறிந்து வாய்ப்பு கொடுப்பதில் ரொம்ப நேர்மையானவர். புத்திசாலித்தனமான, சிறந்த கிரிக்கெட் அறிவையும் புரிதலையும் கொண்டவர் கங்குலி என்று அக்தர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.