இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர் முடிவில் 227 ரன்கள் அடித்தது. 228 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அபாரமான சதமடித்து அணியை வெற்றி பெற செய்தார். 

சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்துகள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. அதனால் பேட்டிங் ஆடுவதற்கு சற்று கடினமாக இருந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. போட்டியின் சூழல், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றை நன்கு அறிந்த ரோஹித் சர்மா, இலக்கு எளிதுதான் என்பதால் அவசரப்படாமல் நிதானமாக நின்று ஆடினார். சதமடித்த ரோஹித் சர்மா, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். 

இந்த போட்டியில் ரோஹித்துக்கு ராகுல், தோனி ஆகிய இருவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். ராகுலைவிட தோனிதான் ரோஹித்துடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினார். ரோஹித்தும் தோனியும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்தனர். தோனி 34 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அவர் ரோஹித்துடன் அமைத்த பார்ட்னர்ஷிப் மிக முக்கியமானது. 

இந்நிலையில், தோனி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், தோனி கம்ப்யூட்டரை விட செம ஃபாஸ்ட். ஆடுகளம் எப்படிப்பட்டது என்று கம்ப்யூட்டர் ஆராய்ந்து சொல்வதற்கு முன்னதாக, தோனி அந்த ஆடுகளத்தின் தன்மையை கணித்துவிடுவார் என்று அக்தர் கூறினார்.

தோனி இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக ஆடிவருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கூட சதமடித்தார். தோனி செம ஃபார்மில் ஆடிவரும் நிலையில், ரோஹித் சர்மாவும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.