காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய பும்ரா.. ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த அக்தர்! இப்ப வைரலாகும் வீடியோ
டி20 உலக கோப்பையிலிருந்து பும்ரா காயத்தால் விலகிய நிலையில், அவரது பவுலிங் ஆக்ஷனால் அவருக்கு பின்பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஷோயப் அக்தர் ஏற்கனவே எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
டி20 உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், கோப்பையை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஜஸ்ப்ரித் பும்ராவைத்தான் இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் அதிகமாக சார்ந்திருக்கிறது. பும்ரா தான் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். அவர் காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாததால் தான், டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கி ஆசிய கோப்பையில் இந்திய அணி தோற்றது.
ஆனால் காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஆடிய பும்ரா, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், அவரது முதுகு பிரச்னை காரணமாக மீண்டும் காயத்தால் அவதிப்படும் அவர், தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். டி20 உலக கோப்பையிலிருந்தும் பும்ரா விலகியுள்ளார்.
இதையும் படிங்க - ஒரு கேப்டனாக அதற்குள்ளாக தோனியின் ரெக்கார்டை முறியடித்த ரோஹித் சர்மா
நன்றாக பவுன்ஸ் ஆகும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பும்ரா கடும் தாக்கத்தை ஏற்படுத்துவார். டி20 உலக கோப்பையில் பவுலிங்கை பொறுத்தமட்டில் பும்ராவைத்தான் இந்திய அணி நம்பியிருந்தது. ஏற்கனவே புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அதிக ரன்களை வாரி வழங்கிவரும் நிலையில், பும்ராவை நம்பித்தான் இந்திய அணி இருந்தது. இந்நிலையில், அவர் ஆடவில்லை என்றால் அது டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். கேப்டன் ரோஹித் ஒரு கையை இழந்ததுபோல் உணர்வார். பும்ரா இல்லாமல்தான் அணியின் பேலன்ஸ் வலுவிழந்து ஆசிய கோப்பையில் இந்திய அணி தடுமாறியது.
எனவே டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு. இந்நிலையில், பும்ராவின் பவுலிங் ஆக்ஷன் காரணமாக அவருக்கு பின்பகுதியில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஷோயப் அக்தர் ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க - INDL vs AUSL: சுரேஷ் ரெய்னாவின் செம டைவ் கேட்ச்.. வைரல் வீடியோ..! கொண்டாடும் ரசிகர்கள்
அந்த வீடியோவில் பும்ராவின் பவுலிங் ஆக்ஷன் மற்றும் காயத்திற்கான அபாயம் குறித்து பேசிய ஷோயப் அக்தர், பும்ரா அவரது பின்பகுதி மற்றும் தோள்பட்டையை பயன்படுத்தி பந்துவீசுகிறார். அந்த மாதிரி பந்துவீசும்போது பின்பகுதியில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இயன் பிஷப், ஷேன் பாண்ட் ஆகிய பவுலர்களும் இதேமாதிரி பவுலிங் ஆக்ஷனை கொண்டவர்கள் தான். அவர்களும் காயத்தால் அவதிப்பட்டார்கள். எனவே பும்ராவிற்கு போதுமான ஓய்வளிப்பது அவசியம். 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடினால் 3 போட்டிகளில் மட்டுமே அவரை ஆடவைக்க வேண்டும். 2 போட்டிகளில் ஓய்வளிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அவரது ஃபிட்னெஸை பராமரிப்பது கடினம். பும்ரா நீண்டகாலம் காயமில்லாமல் ஆடவேண்டுமென்றால், ஃபிட்னெஸை பராமரிப்பது அவசியம். அனைத்து போட்டிகளிலும் ஆடினால் அவர் காயமடைந்துவிடுவார் என்று அக்தர் எச்சரித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகிவருகிறது.