ஐபிஎல்லுக்காகத்தான் டி20 உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்ற வயிற்றெரிச்சலின் உச்சத்தில் ஷோயப் அக்தர் புலம்பிவருகிறார். 

கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு கிரிக்கெட் அட்டவணை முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர், கொரோனா அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

அக்டோபர் 18ம் தேதி முதல் டி20 உலக கோப்பை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் டி20 உலக கோப்பை தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்டதால், ஐபிஎல்லை அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் நடத்த திட்டமிட்ட பிசிசிஐ, ஐசிசியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருந்தது. இந்நிலையில், டி20 உலக கோப்பையை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக கடந்த 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐசிசி. 

எனவே செப்டம்பர் 26 முதல் நவம்பர் முதல் வாரம் வரையிலான காலத்தில் ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிசி நிர்வாகக்குழு கூடி முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். டி20 உலக கோப்பை தள்ளிப்போனதால் ஐபிஎல் நடப்பது உறுதியாகியுள்ளது. அதனால் ஐபிஎல்லில் ஆடும் சர்வதேச வீரர்கள் சந்தோஷமாக உள்ளனர். 

ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட அனுமதிக்கப்படாத நிலையில், ஐபிஎல்லுக்காகவே திட்டமிட்டு டி20 உலக கோப்பையை ஒத்திவைத்திருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வயிற்றெரிச்சலில் கதறுகின்றனர். ரஷீத் லத்தீஃப் மற்றும் அக்தர் ஆகிய இருவரும் பிசிசிஐயின் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொங்கினர். 

இந்த விவகாரம் குறித்தும் பேசும்போது, பொருளாதார ரீதியாக வலுவான கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து சாடியுள்ளார் அக்தர். அதற்காக 2008 சிட்னி டெஸ்ட்டில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை ஹர்பஜன் சிங் குரங்கு என்று திட்டியதாக எழுந்த சர்ச்சையை பிசிசிஐ தனது அதிகாரத்தால் அடக்கியதாக தெரிவித்துள்ளார் அக்தர். 

இதுகுறித்து பேசியுள்ள அக்தர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவரை(சைமண்ட்ஸ்) மற்றொருவர்(ஹர்பஜன் சிங்) குரங்கு என்று திட்டுகிறார். திட்டிய அந்த நபரை அவர் சார்ந்த அணியின் கிரிக்கெர் வாரியம் காப்பாற்றுகிறது. அந்த விவகாரத்தை பெரிதாக்கினால், தொடரை ரத்து செய்துவிடுவோம் என்று மிரட்டி அந்த சர்ச்சையை அடக்கியது சம்மந்தப்பட்ட கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ). அதற்கு பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் அந்த விவகாரத்தை பெரிதாக்காமல் முடித்தது. ஆஸ்திரேலியர்களின் நாணயம் என்ன ஆயிற்று..?

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 2 வீரர்களை கதறவிட்டீர்கள்(ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை குறிப்பிடுகிறார்). ஆனால் குரங்கு என்று திட்டியவர் தப்பிவிட்டார். அவர்கள்(பிசிசிஐ) தொடரை ரத்து செய்துவிடுவோம் என்று மிரட்டியதற்கு பயந்து, அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றீர்கள். மைக்கில் உங்களுக்கு அந்த சவுண்ட் கேட்கவில்லையா..? என்று அக்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட்டின் அதிகாரமிக்க, ஆதிக்கம் செலுத்தக்கூடிய பொருளாதார அளவில் வலுவான கிரிக்கெட் வாரியமாக இருப்பதை பொறுக்கமுடியாமல் அக்தர் புலம்பிவருகிறார்.