பாட் கம்மின்ஸ், ரபாடா, பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சமகால கிரிக்கெட்டின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களாக திகழ்கின்றனர். பொதுவாக ஃபாஸ்ட் பவுலர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடுவது அரிதினும் அரிதான காரியம். பேட்ஸ்மேன், ஸ்பின் பவுலர்களை விட ஃபாஸ்ட் பவுலர்கள் தான் உடலை அதிகமாக வருத்தி ஆடுபவர்கள். அதனால் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு அடிக்கடி அல்லது அதிகமாக காயம் ஏற்படுவது வழக்கம். அதனால் அவர்களால் தொடர்ச்சியாக நீண்டகாலம் ஆடமுடியாது. 

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஜாகீர் கான், பிரெட் லீ, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய குறிப்பிட்ட சில ஃபாஸ்ட் பவுலர்கள் தான் நீண்டகாலத்திற்கு நல்ல ஃபிட்னெஸுடன் தொடர்ச்சியாக ஆடினார்கள். 

எனவே மிரட்டலாக பந்துவீசி விக்கெட்டுகளை குவிக்கும் ஃபாஸ்ட் பவுலர்கள், ஃபிட்னெஸை பராமரிப்பது, போதுமான ஓய்வு எடுப்பது ஆகியவற்றையும் சரியாக செய்ய வேண்டும். அப்போதுதான் நீண்டகாலம் ஆடமுடியும். 

இந்நிலையில், இங்கிலாந்தின் வளர்ந்துவரும் இளம் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீண்டகாலம் நீடிக்கமாட்டார் என அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில், இப்போதைய ஃபாஸ்ட் பவுலிங் மற்றும் கம்மின்ஸ், ஆர்ச்சர் குறித்து பேசிய அக்தர், கம்மின்ஸ் காயங்களிலிருந்து மீண்டு வந்த பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக வீசிவருகிறார். 2-3 ஆண்டுகள் சிறப்பாக வீசி 100-150 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அதுதான் கெரியரின் உச்சகட்டம். அதன்பின்னர் எல்லா ஃபாஸ்ட் பவுலருக்கும் பொதுவாக ஒரு இடைவெளி உருவாகும். கொஞ்சம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியடைய வேண்டும்.

ஜோஃப்ரா ஆர்ச்சரை பாருங்கள்.. இப்போது மணிக்கு 140 கிமீ வேகத்தில் தான் வீசுகிறார். ஷோயப் அக்தரே, தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்தில் வீசியது கிடையாது என்று மைக்கேல் வாகன் சொன்னதை கேட்டேன். அது தவறான கருத்து. டெஸ்ட் போட்டிகளில் உணவு இடைவேளைக்கு பிறகும் 150 கிமீ வேகத்திற்கு வீசியவன் நான். இன்னிங்ஸின் முடிவுவரை அந்த வேகத்தை தொடர்ந்திருக்கிறேன். கம்மின்ஸ் மிகப்பெரிய ஃபாஸ்ட் பவுலிங் சொத்து. ஆனால் ஆர்ச்சர் நீண்ட காலம் ஆடுவார் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே கடந்த 5 போட்டிகளில் அவரது பவுலிங் வேகம் குறைந்துவிட்டது என்று அக்தர் தெரிவித்தார். 

150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய திறன் வாய்ந்த ஆர்ச்சர், ஸ்விங்கும் செய்கிறார். இங்கிலாந்து அணியில் அறிமுகமானதுமே தனது திறமையை நிரூபித்து, அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.