இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே, ஸ்லெட்ஜிங், சீண்டல்கள், மோதல்களுக்கெல்லாம் பஞ்சமே இருக்காது. அதிலும் கங்குலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்ட காலக்கட்டத்தில் போட்டி கடுமையாக இருக்கும். இந்திய அணியில் சேவாக், சச்சின், டிராவிட், கங்குலி, யுவராஜ் என செம பேட்டிங் ஆர்டர் இருக்கும். பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர் என ஃபாஸ்ட் பவுலர்கள் மிரட்டுவார்கள். 

மிகச்சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள், மிரட்டலான பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொண்டு அதிரடியாக ஆடி அவர்களை தெறிக்கவிடுவது பார்க்கவே சிறப்பாக இருக்கும். அந்தவகையில் அக்தர் ஆடிய காலத்தில் சச்சின், சேவாக் ஆகிய இருவரும் அக்தரின் பவுலிங்கை பொளந்து கட்டியிருக்கின்றனர். அதேவேளையில், அக்தரால் வீழ்த்தவும் பட்டிருக்கின்றனர். 

அந்தவகையில், அக்தருடனான ஸ்லெட்ஜிங் சம்பவம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேவாக் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதில், “நான் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 200ஐ நெருங்கி கொண்டிருந்தபோது, அக்தர் எனக்கு நிறைய பவுன்ஸர்களை வீசி, முடிந்தால் ஹூக் ஷாட் ஆடு என்று தொடர்ந்து நக்கலாக வம்பிழுத்தார். நான் சச்சினை காட்டி, அதோ இருக்கிறார் உனது தந்தை; அவருக்கு பவுன்ஸர் வீசு; அவர்(சச்சின்) ஹூக் ஷாட் அடிப்பார் என்று சொன்னேன். அதேபோல அக்தரும் சச்சினுக்கு ஒரு பவுன்ஸர் வீச, சச்சின் ஹூக் ஷாட்டின் மூலம் சிக்ஸர் அடித்தார். சச்சின் சிக்ஸர் அடித்ததும், மகனே உன்னால் தந்தையை மிஞ்சமுடியாது” என்று அக்தரிடம் சொன்னதாக சேவாக் கூறியிருந்தார். 

இந்த தகவல் மீதான நம்பகத்தன்மை ஏற்கனவே இருந்துவருகிறது. இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று ஏற்கனவே அக்தர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் அதுகுறித்து மீண்டும் பேசியுள்ள அக்தர், சேவாக் சொன்னது மாதிரியான சம்பவம் நடக்கவேயில்லை. ஒருவேளை அவர் அப்படி சொல்லியிருந்தால் நான் சும்மா விட்ருப்பேனா? அவரை களத்திலேயே அடித்திருப்பேன். களத்தில் மட்டுமல்ல; ஹோட்டலிலும் அடித்திருப்பேன் என்று அக்தர் பதிலடி கொடுத்துள்ளார். 

சேவாக், தான் இரட்டை சதத்தை நெருங்கி கொண்டிருந்தபோது இப்படியான சம்பவம் நடந்ததாக கூறியிருக்கிறார். ஆனால் சேவாக் இரட்டை சதமடித்த முல்தான் டெஸ்ட்டில் சச்சின் டெண்டுல்கர் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. எனவே அந்த போட்டியில் அந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் சேவாக் இரட்டை சதமடித்தபோது, சச்சினுக்கு அந்த இன்னிங்ஸில் பேட்டிங் வாய்ப்பே கிடைக்கவில்லை. 2007ல் சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமடித்த போட்டியில் அக்தர் ஆடவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.