டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வருவதும் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை கவர, ஐசிசி-யும் பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் பல விதமான சீரிய முயற்சிகளை எடுத்துவருகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அடுத்ததாக ஐசிசி முன்னெடுத்திருக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

பாரம்பரியமாக 5 நாட்கள் நடத்தப்படும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைப்பது குறித்து ஐசிசி விவாதித்து வருகிறது. ஐசிசி-யின் இந்த முயற்சிக்கு முன்னாள் வீரர்கள் முதல் இந்நாள் வீரர்கள் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்திருவருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான க்ளென் மெக்ராத்தும் இந்நாள் வீரரான நேதன் லயனும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் முயற்சிக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கங்குலியிடம் கருத்து கேட்டபோது, எந்தவித திடமான திட்டமும் அதுகுறித்த அறிவிப்பும் இல்லாதநிலையில், இப்போதே அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது. அதுகுறித்த ப்ரபோசல் வரட்டும்.. பார்க்கலாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில், 4 நாள் டெஸ்ட் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஷோயப் அக்தர், கங்குலியும் இதற்கு கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அக்தர், 4 நாள் டெஸ்ட் போட்டி மிகவும் முட்டாள்தனமானது. யாருக்குமே அதில் ஆர்வம் இல்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி மிகச்சிறந்த அறிவாளி. அவர் கண்டிப்பாக இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டை கங்குலி அழியவிடமாட்டார். பிசிசிஐயின் ஒப்புதல் இல்லாமல் இந்த திட்டத்தை ஐசிசி செயல்படுத்த முடியாது. கங்குலி கண்டிப்பாக 4 நாள் டெஸ்ட் திட்டத்திற்கு ஆதரவளிக்கமாட்டார். அதேபோல பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் வீரர்களும், இந்த விவகாரத்தில் தங்களது கருத்தை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்று அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.