இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணியின் பவுலர்கள் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் ஆலோசனை கூறியுள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இந்த முறை டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

அதற்கு இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம். இந்நிலையில், இங்கிலாந்தில் இந்திய பவுலர்கள் எப்படி பந்துவீச வேண்டும் என்று ஷோயப் அக்தர் ஆலோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், இங்கிலாந்து பவுலர்களுக்கு சாதகம் சற்று அதிகம். குறிப்பாக ஆர்ச்சரும் ஆண்டர்சனும் அசத்துவர்கள். ஆண்டர்சனுக்கு எதிராக கோலி எப்படி சொதப்பியிருக்கிறார் என்ற கடந்த கால வரலாறு நமக்கு தெரியும். இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவதால் அவர்களுக்குத்தான் அதிக சாதகம்.

இந்திய பவுலர்கள் அவர்களது லென்த்தில் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். நான் பவுன்ஸர்கள் வீசுவதுதான் என்னுடைய ஆக்ரோஷம் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படியில்லை. நான் சரியான ஏரியாக்களில் வீசியதுதான் எனது ஆக்ரோஷம். அதிவேகத்திலும், வேகத்தில் காட்டிய வேரியேஷனும் தான் எனது ஆக்ரோஷம். எனவே இந்திய அணிக்காக எந்த ஃபாஸ்ட் பவுலர்கள் ஆடினாலும் சரி.. சரியான லைன் & லெந்த்தில் நல்ல வேகத்தில் தொடர்ச்சியாக வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்று அக்தர் தெரிவித்திருக்கிறார்.