இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணி 5-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது. முதல் 4 போட்டிகளிலும் வென்றிருந்த இந்திய அணி, இன்று நடந்த கடைசி போட்டியிலும் வென்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது. 164 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் சேஃபெர்ட் மற்றும் டெய்லர் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ஆனால் அவர்கள் கடைசி வரை களத்தில் நின்று தங்கள் அணிக்காக வெற்றியை தேடிக்கொடுக்க தவறிவிட்டனர். 

அந்த அணி 20 ஓவரில் 156 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்த போட்டியிலும் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தின் சொந்த மண்ணில் அந்த அணியை 5-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. 

இந்த போட்டியில் ஷிவம் துபே மோசமான டி20 சாதனையை செய்தார். 10வது ஓவரை வீசிய துபே, அந்த ஓவரில் 34 ரன்களை வாரிவழங்கினார். அந்த ஓவரில் சேஃபெர்ட்டும் டெய்லரும் ஆளுக்கு தலா 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினர். ஒரு நோ பால் மற்றும் ஒரு சிங்கிள் என மொத்தம் அந்த ஓவரில் 34 ரன்களை வாரி வழங்கினார் துபே.

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர் என்ற மோசமான சம்பவத்தை செய்த துபே, டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வழங்கிய இரண்டாவது வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். 2007ல் ஸ்டூவர்ட் பிராட் இந்தியாவுக்கு எதிராக ஒரே ஓவரில் 36 ரன்களை வாரி வழங்கியதே மோசமான சாதனையாக உள்ளது. யுவராஜ் சிங் 6 சிக்ஸர்களை விளாசிய சம்பவம்தான் அது. அதற்கடுத்த இடத்தில் ஷிவம் துபே இருக்கிறார்.