ஐபிஎல் 13வது சீசன் நடப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கியிருக்க வேண்டிய டி20 உலக கோப்பை ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

எனவே ஐபிஎல் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குவது உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளில் பிசிசிஐ-யும் ஐபிஎல் நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது. வீரர்களும் பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து வீரர்களை ஐபிஎல்லில் ஆட அந்நாடுகள் அனுமதித்துள்ளன. 

கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், அண்மையில் ரெய்னா பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். ஷமி மற்றும் பியூஷ் சாவ்லாவின் பவுலிங்கில் அவர் பயிற்சி செய்த வீடியோ செம வைரலானது. இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரும், டெல்லி கேபிடள்ஸ் அணியின் வீரருமான ஷிகர் தவானும் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். 

தான் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து, மீண்டும் பேட்டில் பந்து படும் சத்தத்தை கேட்க மகிழ்ச்சியாக இருப்பதாக டுவீட் செய்துள்ளார். அந்த வீடியோ இதோ..

கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியின் தொடக்க வீரராக இறங்கி ஆடிய தவான், பெரியளவில் சொல்லும்படியாக எந்த இன்னிங்ஸும் ஆடவில்லை. கடந்த சீசனில் 521 ரன்கள் அடித்தார்.