தினேஷ் கார்த்திக் சொன்னது நடந்தது.. நண்பனை கைவிட்ட கேப்டன் ரோஹித்..! சீனியர் வீரரின் கிரிக்கெட் கெரியர் ஓவர்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் புறக்கணிப்பு, அவரது ஒருநாள் கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையே பறைசாற்றுகிறது.
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய இருபெரும் தொடர்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இந்திய அணி, அடுத்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு அணுகுமுறையை மாற்றி புதிய அணியுடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிரடியான இளம் வீரர்கள் வந்துவிட்ட நிலையில், பழைய வீரர்களை தாண்டி யோசிக்க வேண்டியிருப்பதால், அதைநோக்கி நகர்ந்துவிட்டது இந்திய அணி.
டி20 கிரிக்கெட் அறிமுகமான பின், ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளின் அணுகுமுறைகளும் மாறியுள்ளன. அதனால் இன்னும் பழைய அணுகுமுறையுடன் ஆடமுடியாது. முன்பெல்லாம் 300 ரன்களே பெரிய ஸ்கோராக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது 400 ரன்கள் அசால்ட்டாக அடிக்கப்படுகிறது.
எனவே அதற்கேற்ப இந்திய அணியும் அதிரடியான அணுகுமுறையை கையில் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷிகர் தவான். ரோஹித் ஆரம்பத்தில் மெதுவாக ஆடி, பின்னர் களத்தில் நிலைத்தபின்னர் அடித்து ஆடக்கூடியவர். தவானும் பெரிதாக அடித்து ஆடக்கூடிய வீரர் கிடையாது. எனவே இந்திய அணி மிரட்டலான தொடக்கத்தை பெற முடியாததால் ஸ்கோரும் ஒரு குறிப்பிட்ட லெவலிலேயே அமைகிறது.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து, 131 பந்தில் 210 ரன்களை குவித்து பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்று கவனத்தையும் ஈர்த்தார் இஷான் கிஷன். எனவே ரோஹித்துடன் இஷான் கிஷனை ஓபனிங்கில் இறக்குவது சிறப்பாக இருக்கும் என்ற கருத்து எழுந்தது. இஷான் கிஷன் தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்துவார். ரோஹித் களத்தில் நிலைத்து, நிலைத்தபின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். இவர்கள் காம்பினேஷன் சிறப்பாக இருக்கும். மேலும் ஷுப்மன் கில்லும் இருக்கிறார். எனவே தவானுக்கான அவசியம் இல்லாமல் போனது. அவரும் கடைசியாக ஆடிய ஒருநாள் தொடர்களில் சரியாக பேட்டிங் ஆடாமல் சொதப்பினார்.
எனவே ஷிகர் தவானை தாண்டி ஏற்கனவே யோசிக்க ஆரம்பித்துவிட்டது பிசிசிஐ. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தது. ரோஹித்தும் தவானும் இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 9 ஆண்டுகளாக ஓபனிங் செய்துவரும் நிலையில், தவானை ரோஹித் நினைத்தால் காப்பாற்றலாம் என்றிருந்தது. ஆனால் ஷிகர் தவானின் சிறப்பான கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்துவிட்டதாகவே தினேஷ் கார்த்திக் கருத்து கூறியிருந்தார்.
அதேபோலவே, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு தவானை கடந்து யோசிக்க வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்து, தவானை விடுவித்தது இந்திய அணி. கேப்டன் ரோஹித்தும் தவானை கைவிட்டுவிட்டார். ரோஹித் - தவான் இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய சாதனைகளை படைத்திருந்தாலும், எதிர்காலத்திற்கான அணியை கட்டமைப்பதற்கான அடித்தளத்தை இந்திய அணி அமைத்துவிட்டது. ஷிகர் தவானுக்கு ஒருநாள் உலக கோப்பையில் ஆட இடம் கிடைக்காது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடும் நிலையில், அந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் ஏற்கனவே கழட்டிவிடப்பட்ட தவான், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிவந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் கெரியரும் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அவர் 167 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6793ரன்களை குவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.