எல்லா காலக்கட்டத்திலுமே ஃபாஸ்ட் பவுலிங்கில் சிறந்து விளங்கும் அணி பாகிஸ்தான். பாகிஸ்தான் அணி உருவாக்கியதில் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். 

1997ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். பாகிஸ்தான் அணிக்காக  46 டெஸ்ட் போட்டிகளிலும் 163 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார் அக்தர். அக்தர் ஆடிய காலத்தில், எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் மிரட்டலான பவுலர்களில் அக்தரும் ஒருவர். 

160 கிமீ வேகம் வரை வீசியுள்ளார் அக்தர். அக்தரின் தோற்றம், அவர் பந்துவீச ஓடிவரும் வேகம் என அனைத்துமே மிரட்டலாக இருக்கும். அதேபோலத்தான் அவரது பவுலிங்கும் பேட்ஸ்மேன்களை மிரட்டும். குறிப்பாக ஸ்விங்கிங் யார்க்கர்களை வீசுவதில் அக்தர் வல்லவர்.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்துவீசியதால், ராவல்பிண்டியை சேர்ந்த அவர், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டார். அக்தர் ஆடிய காலக்கட்டத்தில், பெரிய பேட்ஸ்மேன்கள் முதல் அப்போதைய இளம் பேட்ஸ்மேன்கள் வரை அனைவரையுமே தனது வேகத்தில் மிரட்டியெடுத்தவர் அக்தர்.

இந்நிலையில், அக்தரின் ஸ்பெல் முடிவதற்காக நாங்கள்லாம் காத்திருக்கிறோம் என்று ஷான் போலாக் கூறியிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷான் போலாக், அக்தர் ஆடிய காலத்தில் நாங்கள்(தென்னாப்பிரிக்கா) பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் ஆடும்போது, அக்தரின் ஸ்பெல் முடிந்துவிட்டதா, இன்னும் எத்தனை ஓவர் அக்தர் வீசுவார் என்பதை தெரிந்துகொள்ள பாகிஸ்தான் கேப்டனை பார்த்து கொண்டிருப்போம். அக்தரின் ஸ்பெல் முடிந்துவிட்டால், பின்னர் தான் நாங்கள், ஓ.... யெஸ்..  என்ற நிம்மதியான மனநிலைக்கு வருவோம் என்று போலாக் தெரிவித்துள்ளார்.

ஷான் போலாக் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் மட்டுமல்லாது, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாகவும் இருந்தவர். அவர் கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னர்தான் க்ரேம் ஸ்மித், அந்த அணியின் கேப்டன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.