இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி 369 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே, மயன்க் அகர்வால், ரிஷப் பண்ட் என யாருமே பெரிய இன்னிங்ஸ ஆடவில்லை. தொடக்க வீரர் ரோஹித் சர்மா மட்டும் 44 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 

இந்திய அணி 186 ரன்களுக்கே ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தரும் ஷர்துல் தாகூரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 7வது விக்கெட்டுக்கு 123 ரன்களை குவித்தனர். ஷர்துல் தாகூர் 67 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் அடித்தது.

33 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடி 294 ரன்களுக்கு சுருண்ட ஆஸி., அணி, இந்திய அணிக்கு 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 324 ரன்கள் தேவை.

இந்த போட்டியில் ஷர்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடியின் பொறுப்பான மற்றும் அபாரமான பேட்டிங்கால் தான் இந்திய அணி தப்பியது. இல்லையெனில் முதல் இன்னிங்ஸில் ரன் வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருந்திருக்கக்கூடும். சுந்தரும் தாகூரும் இணைந்துதான் அணியை காப்பாற்றினர்.

இந்நிலையில், தான் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, ஆஸி., வீரர்கள் தன்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயன்றது குறித்து பேசிய ஷர்துல் தாகூர், எனக்கு பேட்டிங் ஆடும் திறமை இருக்கிறது. நெட்டில் த்ரோடவுன் இருக்கும்போது, நான் பேட்டிங் ஆடி பயிற்சி செய்வேன். இந்த போட்டியில் எனக்கு வாய்ப்பு அதுவாகவே உருவானது. ஆஸி., வீரர்கள் என்னுடன் சில முறை பேச முயன்றனர். ஆனால் நான் பதிலளிக்கவில்லை. சாதாரணமான ஒன்றிரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தேன். என்னை ஸ்லெட்ஜ் செய்ய முயன்றால் கூட நான் கண்டுகொள்ளாமல் எனது ஆட்டத்தில் தான் கவனம் செலுத்துவேன் என்று ஷர்துல் தாகூர் தெரிவித்தார்.