Asianet News TamilAsianet News Tamil

India vs South Africa: லேன்ஸ் க்ளூஸனருடன் சாதனையை பகிர்ந்த ஷர்துல் தாகூர்..! தரமான சாதனை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர், லேன்ஸ் க்ளூஸனருடன் ஒரு சாதனையை பகிர்ந்துள்ளார்.
 

Shardul Thakur joins Lance Klusener in achieving unique batting milestone with maiden ODI fifty
Author
Paarl, First Published Jan 20, 2022, 8:20 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி பார்லில் நடந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டெம்பா பவுமா (110) மற்றும் வாண்டர் டசனின் (129*) அபாரமான சதத்தால் 50 ஓவரில் 296 ரன்களை குவித்தது.

297 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் தவானும் கோலியும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 92 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய தவான் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த மாத்திரத்தில் கோலியும் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தவான், கோலி விக்கெட் விழுந்த பின், ரிஷப் பண்ட் (16), ஷ்ரேயாஸ் ஐயர் (17), வெங்கடேஷ் ஐயர் (2), அஷ்வின் (7) ஆகியோர் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். ஆனால் ஷர்துல் தாகூர் மட்டும் கடைசிவரை தாக்குப்பிடித்து ஆடி ஆறுதல் அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 265 ரன்கள் மட்டுமே அடித்ததால், 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய அணிக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது, ஷர்துல் தாகூரின் பேட்டிங் தான். பவுலிங்கில் 10 ஓவர்கள் வீசி 72 ரன்களை விட்டுக்கொடுத்த ஷர்துல் தாகூர், அதிரடியாக பேட்டிங் ஆடி 43 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

214 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 9வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூரும் பும்ராவும் இணைந்து 46 பந்துகளில் 51 ரன்களை சேர்த்தனர். இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் போட்டியில் 9வது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட 4வது அதிகபட்ச ஸ்கோர் இதுதான். யூசுஃப் பதான் -  ஜாகீர் கான் (2011), வைன் பார்னெல் - டேல் ஸ்டெய்ன் (2010) மற்றும் அஜய் ஜடேஜா  - ஜவகல் ஸ்ரீநாத் (2000) ஆகிய பார்ட்னர்ஷிப் அதிக ரன்களை அடித்துள்ளது.

அதேபோல, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் போட்டியில் 8ம் வரிசை அல்லது அதற்கு பின்வரிசையில் இறங்கி அரைசதம் அடித்த 5வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷர்துல் தாகூர். இதற்கு முன்பாக, சபா கரீம், லேன்ஸ் க்ளூசனர், ஆண்ட்ரூ ஹால், ரியான் மெக்லரேன் ஆகிய வீரர்களின் பட்டியலில் ஷர்துல் தாகூரும் இணைந்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios