ஐபிஎல் கோப்பையை வெல்ல சில அணிகள் தவம் கிடக்கும் நிலையில், 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் டைட்டிலை வென்ற கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஷேன் வார்ன்.
ஷேன் வார் ஆல்டைம் தலைசிறந்த ஸ்பின்னர் மட்டுமல்லாது, சிறந்த கேப்டனும் கூட. டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான ஷேன் வார்ன், சிறந்த ஸ்பின்னர் மட்டுமல்லாது மிகச்சிறந்த கேப்டனும் கூட.
அவரது கேப்டன்சி திறனை வெளிக்காட்டியதில் ஐபிஎல்லுக்கு மிகச்சிறந்த பங்கு உண்டு. 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. முதல் ஐபிஎல்லில் ஷேன் வார்ன் தலைமையேற்று வழிநடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுமே மிகப்பெரும் ஜாம்பவான்களை பெற்றிருந்தது.
மும்பை இந்தியன்ஸில் சச்சின் - ஜெயசூரியா, சிஎஸ்கேவில் தோனி - முரளிதரன் - மேத்யூ ஹைடன், ஆர்சிபியில் ராகுல் டிராவிட் - ஜாக் காலிஸ் - கும்ப்ளே, டெக்கான் சார்ஜர்ஸில் கில்கிறிஸ்ட் - அஃப்ரிடி - சைமண்ட்ஸ், கேகேஆரில் கங்குலி - பாண்டிங் - அக்தர் என ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 4-5 பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஆனால் ஷேன் வார்ன் தலைமையில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், பிற்காலத்தில் பெரிய வீரர்களாக உருவெடுத்த, ஆனால் அந்த காலக்கட்டத்தில் இளம் வீரர்களாக இருந்த ஜடேஜா, ஷேன் வாட்சன், யூசுஃப் பதான், முனாஃப் படேல் ஆகிய வீரர்களை வைத்துக்கொண்டு முதல் டைட்டிலை அடித்தவர் ஷேன் வார்ன்.
முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் அணி வென்றதற்கு முக்கிய காரணம், ஷேன் வார்ன் தான். பெரிய வீரர்கள் அணியில் இல்லை என்றாலும், இருக்கிற வீரர்களை வைத்துக்கொண்டு, எதிரணிகளுக்கு எதிராக தெளிவான வியூகங்களுடன் சென்று ஒவ்வொரு அணியையும் அடித்து காலி செய்து ஃபைனல் வரை சென்றது மட்டுமல்லாது, ஃபைனலில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை வீழ்த்தி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார் ஷேன் வார்ன்.
ஷேன் வார்ன் மிகச்சிறந்த கேப்டன் என்பதை அப்போதுதான் கிரிக்கெட் உலகம் அறிந்தது. ஷேன் வார்னின் கேப்டன்சியில் அந்த ஐபிஎல்லில் ஆடி, பிற்காலத்தில் பெரிய வீரராக வளர்ந்து, ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், ராகுல் டிராவிட், தோனி என பல சிறந்த வீரர்களின் கேப்டன்சியின் கீழ் ஆடிய ஷேன் வாட்சன், மிகச்சிறந்த 2 கேப்டன்களில் ஒருவராக ஷேன் வார்னை மதிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற, பெரிய பெரிய வீரர்களை அணியில் பெற்றிருப்பது மட்டுமே முக்கியமல்ல. சிறப்பான களவியூகம், வியூகத்தை களத்தில் சரியாக செயல்படுத்துவது, வீரர்களை திறம்பட கையாண்டு அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவது ஆகியவை தான் முக்கியம் என்பதை, டி20 கிரிக்கெட் அறிமுகமான ஆரம்ப காலத்திலேயே நிரூபித்து காட்டியவர் ஷேன் வார்ன்.
