தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், இந்திய அணியில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வரும் ஹர்திக் பாண்டியா, பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக அணியில் இணைந்தார் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். 

விஜய் சங்கர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அபாரமாக ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை இந்திய அணி தொடக்கத்திலேயே இழந்துவிட, ராயுடுவுடன் இணைந்து சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். விஜய் சங்கரின் அந்த இன்னிங்ஸ் அவரது மீதான  நம்பிக்கையை அணி நிர்வாகத்திற்கு அதிகரித்தது. 

பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும் பவுலிங்கில் பெரிதாக சோபிக்காமல் இருந்த விஜய் சங்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் ஒருநாள் போட்டியில் மிகவும் நெருக்கடியான சூழலில் கடைசி ஓவரை வீசி, அதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி திரில் வெற்றி பெற செய்தார். விஜய் சங்கரின் அந்த ஒரு வெற்றி ஓவரே உலக கோப்பை அணியில் அவரது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்தது. 

பேட்டிங், பவுலிங்கில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார் விஜய் சங்கர். அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அசாத்திய ஃபீல்டிங் என இந்திய அணியில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்து வைத்துள்ளவர் ஹர்திக் பாண்டியா. இந்நிலையில் விஜய் சங்கரின் வருகை இந்திய அணியின் ஆல்ரவுண்டிங் ஆப்சனை அதிகப்படுத்தியுள்ளது. 

உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியாவுடன் விஜய் சங்கரும் அணியில் இணையும் வாய்ப்பு உள்ளது. விஜய் சங்கர் என்னதான் ஆடினாலும் ஹர்திக் பாண்டியா தான் முதன்மை ஆல்ரவுண்டர். 

விஜய் சங்கர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த நிலையில், இருவர் குறித்தும் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், விஜய் சங்கர் நன்றாக ஆடி கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால் ஹர்திக் பாண்டியா எப்போதுமே மேட்ச் வின்னர். விஜய் சங்கரை விட ஹர்திக் பாண்டியா தான் சிறந்த ஆல்ரவுண்டர் என ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.