கொரோனாவால் உலகமே முடங்கியுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்துமே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஷேன் வார்ன் ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்து அவர்களை எண்டர்டெய்ன் செய்துவருகிறார்.

அந்தவகையில் ரசிகர் ஒருவர், அவரிடம் சச்சின் டெண்டுல்கர் - பிரயன் லாரா ஆகிய இருவரில் எல்லா கண்டிஷனிலும் சிறப்பாக ஆடக்கூடிய வீரர் யார் என்று கேள்வி எழுப்பினார். இருவருக்குமே பந்துவீசிய அனுபவம் கொண்ட சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், அந்த கேள்விக்கு பைனரியாக பதிலளித்தார்.

எந்த சூழலிலும் சிறந்த பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டுமென்றால் என்னுடைய தேர்வு சச்சின் டெண்டுல்கர் தான். ஆனால் கடைசி நாளில் 400 ரன்கள் என்ற இலக்கை விரட்ட வேண்டும் என்ற அவர்கள் இருவரில் லாராவை தேர்வு செய்வேன். அவர்கள் இருவரும் இரவு பகல் போன்றவர்கள். இவர்களுக்கு அடுத்துத்தான் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன்களும் என்று ஷேன் வார்ன் தெரிவித்தார்.

சச்சின் டெண்டுல்கர் - லாரா இருவரும் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்கள். சச்சின் டெண்டுல்கர் 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியதால் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் ஆகிய நிறைய சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின். லாரா, சச்சின் அளவுக்கு நீண்ட காலம் ஆடவில்லையென்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 400 ரன்கள் என்ற அபார சாதனையை படைத்தவர் லாரா. சாதனைகள், நம்பர்களை கடந்து இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.