2019 உலக கோப்பையை இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்திருந்தனர். ஆருடம் தெரிவித்த அனைவரது முதல் தேர்வும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிதான். அதேபோலவே அவர்களின் நம்பிக்கையையும் கணிப்பையும் ஏமாற்றாமல் இங்கிலாந்து அணியே கோப்பையை வென்றது. 

உலக கோப்பை இறுதி போட்டி டை ஆகி, சூப்பர் ஓவரும் டை ஆனதால், பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலக கோப்பை இங்கிலாந்து அணிக்கு கொடுக்கப்பட்டது. பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்பட்டதே கடும் சர்ச்சையானது. இறுதி போட்டியில் ஆடிய நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே கோப்பைக்குத் தகுதியான அணிகள் தான். தார்மீக அடிப்படையில், இரு அணிகளுமே வெற்றி பெற்ற அணிகள் தான். 

இந்நிலையில், உலக கோப்பை குறித்து பேசிய ஷேன் வார்ன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா லீக் போட்டியில் தோற்றது குறித்து அதிருப்தியும் ஏமாற்றமும் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்காவிட்டால், அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டிருக்கும். உலக கோப்பையின் முடிவே மாறியிருக்கக்கூடும் என்று தெரிவித்தார். 

ஷேன் வார்ன் ஏன் அப்படி சொன்னார் என்று பார்ப்போம். லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இங்கிலாந்து 12 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் நியூசிலாந்து 11 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் இருந்தன. 

புள்ளி பட்டியலில் முதல் மற்றும் நான்காம் இடத்தில் இருக்கும் அணிகளும் இரண்டு மற்றும் மூன்றாமிடத்திலும் அணிகளும் மோதும் என்பதால் இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரு அரையிறுதி போட்டியில் மோதின, ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் ஒரு போட்டியில் மோதின. இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்தும் இறுதி போட்டிக்கு சென்றன. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தால் 16 புள்ளிகளுடன், இந்திய அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை ஆஸ்திரேலியா பிடித்திருக்கும். அப்படி நடந்திருந்தால், அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டிருக்கும். இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டிருக்கும். அரையிறுதியில் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா கண்டிப்பாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும். அதன்பின்னர் இறுதி போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்பதுதான் ஷேன் வார்னின் கருத்து.