ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் மற்றும் பிராண்ட் அம்பாசடராக, அந்த அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பயிற்சியாளரான சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் லெஜண்ட் ரிஸ்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2008 முதல் 2011 வரை ஆடினார். ராஜஸ்தான் ராயல்ஸின் ஐபிஎல் கோப்பை வின்னிங் கேப்டன் ஷேன் வார்ன். ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சீசனிலேயே ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் முதல் டைட்டிலை வென்றது.

அதன்பின்னர் அந்த அணியின் பயிற்சியாளராகவும் ஷேன் வார்ன் செயல்பட்டுள்ளார். இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஷேன் வார்ன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷேன் வார்ன், ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து செயல்படுவதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.