டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு(800 விக்கெட்டுகள்) அடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் ஷேன் வார்னே தான். ஷேன் வார்னே டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியில் ஆடிய வார்னே, சச்சின், பிரயன் லாரா, ராகுல் டிராவிட், காலிஸ், ஜெயசூரியா போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசி திணறடித்துள்ளார். 

ஷேன் வார்னே வீசியுள்ள சில சுழற்பந்துகள், காலத்தால் அழியாதவை. பேட்ஸ்மேனை அதிரவைக்குமளவிற்கு தாறுமாறாக டர்ன் ஆகி திணறடித்துள்ளன. அப்படியான ஒரு பந்துதான் 1999ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வரின் விக்கெட்டை வீழ்த்திய பந்து. 

1999ல் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில், அந்த அணியின் தொடக்க வீரர் சயீத் அன்வரை, தனது மாயாஜால சுழலில் கிளீன் போல்டாக்கி மிரட்டினார் வார்னே. அந்த குறிப்பிட்ட போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அன்வர், இரண்டாவது இன்னிங்ஸில் 78 ரன்களுடன் களத்தில் இருந்தபோதுதான், வார்னே அந்த வரலாற்று சிறப்புமிக்க பந்தை வீசினார். 

இடது கை பேட்ஸ்மேனான அன்வருக்கு ஷேன் வார்னே வீசிய அந்த பந்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, அதாவது கிட்டத்தட்ட பத்தாவது ஸ்டம்பில் பிட்ச் ஆகி, தாறுமாறாக திரும்பி, லெக் ஸ்டம்பை கழட்டியது. ஸ்டம்பையும் விக்கெட்டையும் பறிகொடுத்த அன்வரே, வார்னேவின் அந்த பந்தை ரசித்து சிரித்துக்கொண்டே சென்றார். காலத்தால் அழியாத அந்த மாயாஜால சுழல் பந்தை வார்னே வீசி, நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதன் நினைவாக அந்த வீடியோ இதோ...