Asianet News TamilAsianet News Tamil

தனி ஒருவனாக பாகிஸ்தான் அணியை கரைசேர்த்த ஷான் மசூத்..! முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 326 ரன்கள் அடித்துள்ளது.
 

shan masood century leads pakistan to put decent score on board in first innings of first test against england
Author
Manchester, First Published Aug 6, 2020, 9:48 PM IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அபித் அலி 16 ரன்களிலும் கேப்டன் அசார் அலி ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் தொடக்க வீரர் ஷான் மசூத்துடன் ஜோடி சேர்ந்த பாபர் அசாம், அதிரடியாக ஆடி அரைசதமடித்தார். முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 100 பந்தில் 69 ரன்கள் அடித்திருந்த பாபர் அசாம், இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஆசாத் ஷாஃபிக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பாகிஸ்தான் அணி 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் களத்தில் நங்கூரமிட்டு நிலைத்து நின்று ஆடிவரும் தொடக்க வீரர் ஷான் மசூத் சதமடித்தார். 6வது விக்கெட்டுக்கு ஷான் மசூத்துடன் ஜோடி சேர்ந்த ஷதாப் கான், மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த ஷான் மசூத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஷதாப் கான் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆறாவது விக்கெட்டுக்கு ஷான் மசூத்தும் ஷதாப் கானும் இணைந்து 105 ரன்களை சேர்த்தனர். அதன்பின்னர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. யாசிர் ஷா 5 ரன்களிலும் முகமது அப்பாஸும் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, 150 ரன்களை கடந்த ஷான் மசூத், 156 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். கடைசியாக நசீம் ஷாவும் அவுட்டாக, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டானது. 

பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத், பாபர் அசாம் மற்றும் ஷதாப் கான் ஆகிய மூவரை தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஷான் மசூத் பொறுப்புடன் பெரிய இன்னிங்ஸை ஆடி பாகிஸ்தான் அணியை கரை சேர்த்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகிவிட்டனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios