இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, களத்தில் கோபத்தை வெளிப்படுத்தமாட்டார். அவருக்கு கோபம் வந்தாலும் கூட அதை பெரும்பாலும் வெளிப்படுத்தாமல், வீரர்களை நிதானமாகவே கையாள்வார். வீரர்கள் ரொம்ப ஓவராக சொல்பேச்சு கேட்காமலோ அல்லது திட்டத்திற்கு மாறாக, தனது அனுமதி இல்லாமல் நடந்துகொண்டாலோதான் கடிந்துகொள்வார். 

அதையும் கேமரா முன் செய்யவே மாட்டார். அதனாலேயே கேப்டன் கூல் என்றழைக்கப்படுகிறார். ஆனாலும் தோனியின் கோபத்திற்கு ஆளாகிய வீரர்கள், தோனி தங்களை கடிந்துகொண்ட சம்பவம் குறித்து அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்கள். ஏற்கனவே குல்தீப் யாதவ், தோனி தன்னை திட்டிய சம்பவத்தை பகிர்ந்துள்ள நிலையில், தற்போது ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி, தோனியிடம் திட்டு வாங்கியது பற்றி நினைவுகூர்ந்துள்ளார். 

மனோஜ் திவாரியுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய ஷமியிடம், மனோஜ் திவாரி, எப்போதாவது தோனியிடம் திட்டுவாங்கியது உண்டா என்று கேட்க, அதற்கு பதிலளித்த ஷமி, ஆம்.. 2014ல் ஒரு முறை செமயா வாங்கியிருக்கிறேன் என்றார்.

அதுகுறித்து பேசிய ஷமி, 2014ல் நியூசிலாந்தின் வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் மெக்கல்லம் முச்சதம் அடித்தார். அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மெக்கல்லம் 14 ரன்களில் இருந்தபோது, எனது பவுலிங்கில் விராட் கோலி மெக்கல்லமின் கேட்ச்சை விட்டார். சரி.. மறுநாள் அவுட்டாக்கிவிடலாம் என்று நினைத்தேன். 

ஆனால் அதன்பின்னர் மெக்கல்லமை அவுட்டே ஆக்கமுடியவில்லை. லன்ச், டீ பிரேக் என ஒவ்வொரு செசனும் முடிந்துகொண்டிருக்கிறது. அவர் அடித்து ஆடி ரன்களை குவித்து முச்சதம் அடித்தார். அன்றைய ஆட்டத்தின் லன்சுக்கு முந்தைய ஓவரின் ஐந்தாவது பந்தை பவுன்ஸராக வீசினேன். மற்றொரு வீரரின் கேட்ச்சை மீண்டும் கோலி விட்டுவிட, அந்த ஆதங்கத்தில், லன்ச்சுக்கு முந்தைய ஓவரின் ஐந்தாவது பந்தை பவுன்ஸராக வீச, அது மெக்கல்லமின் பேட்டில் பட்டு தோனியின்  தலைக்கு மேலாக சென்று பவுண்டரிக்கு போனது. 

அந்த ஓவர் முடிந்து லன்சுக்காக சென்றோம். அப்போது, ஓய்வறையில், என்னிடம் வந்த தோனி, எனக்கு தெரியுது.. கேட்ச்சை விட்டாங்க.. சரிதான்.. அதுக்காக கடைசி பந்தை முறையாக வீசுவதில்லையா? என்று கேட்டார். அதற்கு, நானாக வீசவில்லை.. கட்டுப்பாட்டை இழந்து ஸ்லிப்பாகி பவுன்ஸர் ஆகிவிட்டது என்றேன். 

நான் பொய் சொன்னதை கண்டுபிடித்துவிட்ட தோனி மிகவும் காட்டமாக என்னிடம், நான் உன்னை மாதிரி எத்தனை வீரர்களை பார்த்திருக்கிறேன். என்னிடம் பொய் சொல்லாதே.. உன் கேப்டனை முட்டாளாக்க நினைக்காதே என்று கோபமாக கூறினார்.