விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 502 ரன்களையும், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களையும் அடித்தன. 

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 323 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 395 ரன்கள் என்ற இலக்குடன் நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எல்கரை ஜடேஜா நேற்றே வீழ்த்திவிட்டார். இதையடுத்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் முடிந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே டி ப்ருய்னை அஷ்வின் வீழ்த்தினார். ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக திகழும் நிலையில், முதல் இன்னிங்ஸில் சோபிக்காத ஷமி, இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலாக வீசினார். 

பவுமாவை அபாரமான பந்தின் மூலம் கிளீன் போல்டாக்கி அனுப்பிய ஷமி, டுப்ளெசிஸிற்கு ஒரு அபாரமான இன் ஸ்விங்கை வீசி அவரையும் கிளீன் போல்டாக்கினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்து, அப்படியே சென்றுவிடும் என நினைத்து, அந்த பந்தை சீண்டாமல் பேட்டை தூக்கினார் டுப்ளெசிஸ். ஆனால் அந்த பந்து இன் ஸ்விங் ஆகி ஸ்டம்பை காலி செய்தது. ஷமியின் இந்த இன் ஸ்விங்கை கண்டு சில நொடிகள் அதிர்ந்து நின்றார் டுப்ளெசிஸ். 

அதேபோலத்தான் குயிண்டன் டி காக்கும். முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதமடித்த குயிண்டன் டி காக்கிற்கு அபாரமான ஒரு பந்தை வீசினார். அபாரமான லைன் அண்ட் லெந்த்தில் வீசப்பட்ட அந்த பந்து குயிண்டன் டி காக்கின் பேட்டை ஏமாற்றிவிட்டு ஸ்டம்பை கழட்டியது. டுப்ளெசிஸை போலவே, டி காக்கும் சில நொடிகள் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியடைந்து நின்றார். ஷமி முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்க, அடுத்த மூன்று விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார் ஜடேஜா. மார்க்ரம், ஃபிளாண்டர் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய மூவரையும் ஜடேஜா ஒரே ஓவரில் வீழ்த்தினார். இதையடுத்து முத்துசாமியும் டேன் பீட்டும் இணைந்து ஆடிவருகின்றனர்.