இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில், ஊதிய உயர்வை வலியுறுத்தி ஷகிப் அல் ஹசன் தலைமையில் சீனியர் வீரர்கள் சிலர், இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆடமாட்டோம் என அடம்பிடித்து ஸ்டிரைக் செய்தனர். இதற்கிடையே, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியாமல், வங்கதேச அணியின் முன்னாள் ஸ்பான்ஸரான கிராமின்போன் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அது பெரும் சர்ச்சையானது. 

இந்நிலையில், ஷகிப் அல் ஹசனை நீக்கிவிட்டு அவர் இல்லாத புதிய டி20 அணியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கவுள்ளது. டி20 தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஷகிப் அல் ஹசனை மட்டும் நீக்கிவிட்டு புதிய அணி மீண்டும் இன்று அறிவிக்கப்படவுள்ளது. 

டி20 அணி மட்டுமே இன்று அறிவிக்கப்படவுள்ளது. டெஸ்ட் அணியை தேர்வு செய்ய வேண்டி உள்ளதால் அது பின்னர் அறிவிக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு இடைத்தரகர் ஒருவர் அணுகியபோது, ஷகிப் அல் ஹசன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆனால் அந்த தகவலை ஐசிசியிடம் தெரிவிக்காததால், அவருக்கு 18 மாதங்கள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் நீக்கப்பட்டு புதிய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. 

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டி20 அணிக்கு ஷகிப் தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் நீக்கப்படுவதால் புதிய கேப்டனின் தலைமையிலான அணி அறிவிக்கப்படவுள்ளது.