வைடு கொடுக்காத அம்பயரை கோபத்தில் கடுமையாக திட்டிய ஷகிப் அல் ஹசன்..! வைரல் வீடியோ
வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் ஆடியபோது வைடு கொடுக்காததால் அம்பயரை கடுங்கோபத்தில் ஷகிப் அல் ஹசன் திட்டிய வீடியோ வைரலாகிவருகிறது.
வங்கதேச பிரீமியர் லீக் தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. ஃபார்ச்சூன் பரிஷால் மற்றும் சில்ஹெட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தாக்காவில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஃபார்ச்சூன் பரிஷால் அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் அரைசதம் அடித்தார். எதிரணி பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்த ஷகிப் அல் ஹசன், 32 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 67 ரன்களை குவித்தார். தொடக்க வீரர்கள் சதுரங்கா டி சில்வா 36 ரன்களும், அனாமுல் 29 ரன்களும் அடித்து பங்களிப்பு செய்ய 20 ஓவரில் ஃபார்ச்சூன் பரிஷால் 194 ரன்களை குவித்தது.
AUS vs SA டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்
195 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சில்ஹெட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 48 ரன்களும், டௌஹிட் ரிடாய் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 34 பந்தில் 55 ரன்கள் அடித்தார். காட்டடி அடித்த ஜாகிர் ஹசன் 18 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 43 ரன்களை விளாச, அதன்பின்னர் முஷ்ஃபிகுர் ரஹீம் (23) மற்றும் திசாரா பெரேரா (20) இணைந்து இலக்கை அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தனர். 195 ரன்கள் என்ற இலக்கை 19 ஓவரில் அடித்து ஸ்டிரைக்கர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஷகிப் அல் ஹசன் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, இன்னிங்ஸின் 15வது ஓவரின் 4வது பந்தை பவுலர் பவுன்ஸராக வீசினார். அந்த பந்து சற்று உயரமாக சென்றது. ஆனால் அம்பயர் அதற்கு வைடு கொடுக்காமல் ஒன் பவுன்ஸ் கொடுத்தார். அந்த பந்து வைடு என்ற நினைத்த ஷகிப் அல் ஹசன், வைடு கொடுக்காததால் லெக் அம்பயரை கடுங்கோபத்தில் திட்டினார் ஷகிப் அல் ஹசன். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன், இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, அம்பயரை அவமரியாதை செய்து இதுமாதிரி தவறான முன்னுதாரணமாக திகழக்கூடாது.