உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேச அணிகள் மோதிய காலிறுதி போட்டி அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இமாச்சல பிரதேச அணி 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா வெறும் ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிமன்யூ ராணா 28 ரன்களும், நிதின் ஷர்மா 26 ரன்களும் அடித்தனர். கேப்டன் ரிஷி தவான் ஒரு முனையில் நிலைத்து நின்றுகொண்டிருக்க, மறுமுனையில் அனைவரையுமே வீழ்த்தினர் தமிழ்நாடு பவுலர்கள். 

ரிஷி தவான் 35 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவரில் இமாச்சல பிரதேச அணி வெறும் 135 ரன்கள் மட்டுமே அடித்தது. தமிழ்நாடு அணி சார்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளையும் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

136 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன்(7), ஹரி நிஷாந்த்(17) ஆகிய இருவரையும் வீழ்த்திய வைபவ் அரோரா, அருண் கார்த்திக்கையும் டக் அவுட்டாக்கினார். சோனு யாதவ் பதினாறு ரன்களிலும் தினேஷ் கார்த்திக் 2 ரன்னிலும் ஆட்டமிழக்க, 66 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது தமிழ்நாடு அணி.

ஒருமுனையில் நிலைத்து நின்று பாபா அபரஜித்துடன் ஜோடி சேர்ந்த ஷாருக்கான் அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். வெறும் 19 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களை விளாசி தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த அபரஜித் 52 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அபரஜித் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரின் சிறப்பான பேட்டிங்கால் 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.