பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. வரும் 5ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ளது.

பாகிஸ்தான் அணி புதிய டெஸ்ட் கேப்டனான அசார் அலியின் கேப்டன்சியின் கீழ் வலுப்பெறும் முனைப்பில் உள்ளது. எனவே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடும் பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடர் மிக முக்கியமானது. அதேவேளையில், ஏற்கனவே இங்கிலாந்து கண்டிஷன் கடினம் என்பது ஒருபுறமிருக்க, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் செம ஃபார்மில் இருப்பது, ஆண்டர்சன் - பிராட் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியை சமாளிப்பது ஆகியவை எல்லாம் பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் சவால்.

1996ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லவேயில்லை. அதன்பின்னர் ஒருமுறை மட்டும் டிரா செய்தது.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழு மிகச்சிறப்பாக உள்ளது. மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்களும் வெளிநாடுகளில் ரன்களை குவித்தவர்களுமான யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் அணியின் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். எனவே பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என நம்பப்படுகிறது. 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, இங்கிலாந்து கண்டிஷன்களில் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது மிகக்கடினம். எனவே என்னை பொறுத்தமட்டில் பாகிஸ்தான் அணி இந்த தொடரை டிரா செய்தாலே வெற்றி பெற்றதற்கு சமம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தின் மூலம், பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்த தகுதியற்ற அணி என்பதை அவரே ஒப்புக்கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.