பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆல்ரவுண்டருமான ஷாகித் அஃப்ரிடி, சர்ச்சை கருத்துகளுக்கு பெயர்போனவர். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே சர்ச்சையாக பேசுபவர். இந்திய கிரிக்கெட் மற்றும் வீரர்கள் குறித்து மட்டுமல்லாது, அரசியல் ரீதியாகவும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் விதமாகவும் சர்ச்சையாக பேசுவார். பின்னர் கம்பீர் மாதிரியான ஆட்களின் பதிலடியால் மூக்குடைபடுவார். 

இதையே வழக்கமாக வைத்திருக்கிறார் அஃப்ரிடி. இந்நிலையில், அக்தரின் பவுலிங்கிற்கு மட்டுமல்லாது வேறொரு பாகிஸ்தான் முன்னாள் பவுலருக்கும் சச்சின் பயந்தார் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். அது வெறும் கிரிக்கெட் போட்டியாக இருக்காது; இருநாட்டினரும் அதை உணர்வுப்பூர்வமான விஷயமாக பார்ப்பார்கள். அதனால் இரு நாட்டு வீரர்களும் களத்தில் சிறப்பாக ஆட முனைவார்கள். அதிலும், சச்சின் - வாசிம் அக்ரம், சச்சின் - அக்தர் ஆகியோருக்கு இடையேயான போட்டி பார்க்க அருமையாக இருக்கும். வாசிம் அக்ரம், அக்தர் போன்ற சிறந்த பவுலர்களின் பவுலிங்கையெல்லாம் தெறிக்கவிடுவார் சச்சின் டெண்டுல்கர். அவர்களும் சளைத்தவர்கள் அல்ல. சச்சினுக்கு எதிராக சிறப்பாக வீசி சச்சினை பலமுறை அவுட்டாக்கியிருக்கிறார்கள். 

2003 உலக கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் 98 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அந்த போட்டியில் அக்தரின் பவுலிங்கை சச்சின் டெண்டுல்கர் அடித்து துவம்சம் செய்ததை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த போட்டியில் அக்தரின் பவுலிங்கில் தான் சச்சின் வீழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த குறிப்பிட்ட இன்னிங்ஸை போலவே அக்தரின் பவுலிங்கை பலமுறை அடித்து துவம்சம் செய்திருக்கிறார் சச்சின். 

இந்நிலையில், அக்தரின் பவுலிங்கிற்கு சச்சின் டெண்டுல்கர் பயந்தார் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார். அதுகுறித்து பேசியுள்ள அஃப்ரிடி, ஷோயப் அக்தரின் பவுலிங்கில் சிலமுறை சச்சின் பயந்திருக்கிறார். சச்சின் மட்டுமல்ல; உலகின் பல சிறந்த பேட்ஸ்மேன்களை அக்தர் மிரட்டியிருக்கிறார். மிட் ஆஃப் அல்லது கவர் திசையில் ஃபீல்டிங் செய்யும்போது, அக்தரின் பவுலிங்கில் பேட்ஸ்மேன்கள் பயப்படுவதை பார்க்க முடியும். பேட்ஸ்மேனின் உடல்மொழியே காட்டிக்கொடுத்துவிடும். பேட்ஸ்மேன் அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை உடல்மொழியை வைத்தே கண்டுபிடிக்கலாம்.

சச்சினை அக்தர் எப்போதுமே பயமுறுத்தினார் என நான் சொல்லவில்லை. ஆனால் ஒருசில நேரங்களில் சச்சினை பின்னோக்கி நகர்த்தியிருக்கிறார் அக்தர் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார். 

அக்தரை எதிர்த்து ஆடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 3 முறை மட்டுமே சச்சின், அக்தரின் பந்தில் அவுட்டாகியிருக்கிறார். அதேபோல அக்தருக்கு எதிராக சச்சின் பேட்டிங் ஆடிய 19 ஒருநாள் போட்டிகளில் 5 முறை மட்டுமே, அக்தரின் பவுலிங்கி விக்கெட்டை இழந்திருக்கிறார்.

அதேபோல 2011 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அந்த போட்டியில் சயீத் அஜ்மலின் பவுலிங்கை எதிர்கொள்ள சச்சின் பயந்ததாகவும் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.