பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனும் சிறந்த ஆல்ரவுண்டருமான அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர். அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன அஃப்ரிடி, சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக  சிக்ஸர்களை அடித்த வீரர்கள் 476 சிக்ஸர்களுடன் கெய்லுக்கு அடுத்த இரண்டாமிடத்தில் உள்ளார். இவரது அதிரடியான பேட்டிங்கால் பூம் பூம் அஃப்ரிடி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணிக்காக 398 ஒருநாள் போட்டிகள் மற்றும் 99 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். அஃப்ரிடி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக ஆடவில்லை. வெறும் 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஃப்ரிடி ஆடியுள்ளார்.

அஃப்ரிடியின் அடையாளமாக திகழ்வது, 1996ல் இலங்கைக்கு எதிராக 37 பந்தில் அடித்த சதம் தான். 1996ல் கென்யாவின் நைரோபியில் நடந்த ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடிய அப்போதைய இளம் வீரர் அஃப்ரிடி, 4 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் அடித்தார். அந்த போட்டியில் வெறும் 37 பந்தில் சதமடித்து சாதனை படைத்ததோடு, சர்வதேச கிரிக்கெட் உலகையே தன்னை திரும்பி பார்க்கவைத்தார் அஃப்ரிடி. 

அப்பேர்ப்பட்ட அந்த சதத்தை அவர் அடித்தது சச்சின் டெண்டுல்கரின் பேட்டில் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. அந்த தகவலை அஃப்ரிடி தற்போது தெரிவித்துள்ளார்.

அஃப்ரிடி எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், இந்த தகவலை தெரிவித்துள்ளார். “சச்சின் டெண்டுல்கர் அவருக்கு மிகவும் பிடித்தமான மற்றும் நெருக்கமான அவரது பேட் ஒன்றை வக்கார் யூனிஸிடம் கொடுத்தார். அந்த பேட்டை அவர் வீட்டிற்கு எடுத்துச்செல்வதற்கு முன் என்னிடம் கொடுத்தார். நைரோபியில் 1996ல் இலங்கைக்கு எதிரான போட்டியில், சச்சினின் அந்த பேட்டில் தான் பேட்டிங் ஆடி 37 பந்தில் சதமடித்தேன் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.