அஃப்ரிடி என்றாலே அதிரடிதான். அவரது அதிரடியான பேட்டிங்கின் காரணமாக அவரை ரசிகர்கள் பூம் பூம் அஃப்ரிடி என்று அன்புடன் அழைக்கின்றனர்.

மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடாவிட்டாலும், ஆடும் சிறிய இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி விரைவில் ஸ்கோர் செய்வதுடன், ரசிகர்களை ஃபுல் எண்டர்டெய்ன் செய்துவிடுவார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், உலகம் முழுதும் நடக்கும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார் அஃப்ரிடி. வங்கதேச பிரீமியர் லீக்கில் தாக்கா பிளாட்டூன் அணியில் ஆடிவருகிறார் அஃப்ரிடி. அந்த லீக் தொடரில் அண்மையில், ராஜ்ஷாஹி ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார் அஃப்ரிடி. அது அஃப்ரிடியின் கெரியரில் 100வது டக் அவுட். அதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 100 டக் அவுட்டுகள் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் அஃப்ரிடி.

100 டக் அவுட்டுகள் என்ற மோசமான வரலாற்று சாதனையை படைத்த அஃப்ரிடி, அதன்பின்னரும் தனது மொக்கை சாதனை பயணத்தை விடாமல் தொடர்ந்துவருகிறார். சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக இன்று ஆடிய போட்டியிலும் இரண்டே பந்தில் டக் அவுட்டானார். இதன்மூலம் கிரிக்கெட் கெரியரில் 101 டக் அவுட்டுகள் ஆன ஒரே வீரர் என்ற டக் அவுட் சாதனை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் அஃப்ரிடி.