கவுதம் கம்பீருக்கும் ஷாகித் அஃப்ரிடிக்கும் இடையேயான மோதல், அவர்கள் கிரிக்கெட் ஆடிய காலத்திலிருந்து இன்றுவரை நீடித்துவருகிறது. களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியேயும் கருத்தியல் ரீதியாக அவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.

கம்பீர் - அஃப்ரிடி மோதல் இன்றுவரை நீடித்துவருகிறது. இனியும் நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அஃப்ரிடி கம்பீரை வம்பு இழுத்துக்கொண்டே தான் இருப்பார்; அதற்கு கண்டிப்பாக கம்பீர் பதிலடி கொடுத்துக்கொண்டே தான் இருப்பார். ஒரு பிரச்னையையோ, அல்லது விவாதத்தையோ தொடங்குவது யாராக இருக்குமென்றால், அது அஃப்ரிடியாகத்தான் இருக்கும். 

அஃப்ரிடி எப்போதுமே இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீர் குறித்தும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிப்பது வழக்கம். அஃப்ரிடி சர்ச்சையாக பேசும்போதெல்லாம், அவருக்கு எதிரான வலுவான குரலை பதிவு செய்வது கம்பீர். 2007ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான், அவர்களுக்கு இடையேயான காலத்தால் சரிசெய்ய முடியாத விரிசலாக அமைந்துவிட்டது. 2007 ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் ஏற்பட்ட மோதல் கிரிக்கெட்டில் மிகப்பிரபலம். அதுதான் இன்றுவரை தொடர்ந்துவருகிறது. 

அண்மையில் கூட, பிரதமர் மோடியை சாடியிருந்த அஃப்ரிடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் உள்ளே இழுத்து தக்க பதிலடி கொடுத்திருந்தார் கம்பீர். இந்நிலையில், மீண்டும் அஃப்ரிடி தற்போது கம்பீரை சீண்டியுள்ளார். 

நேர்காணல் ஒன்றில் கம்பீரை வம்பிழுத்துள்ளார் அஃப்ரிடி. கம்பீர் குறித்து பேசிய அஃப்ரிடி, ஒரு கிரிக்கெட் வீரராக, ஒரு பேட்ஸ்மேனாக கம்பீரை எனக்கு பிடிக்கும். ஆனால் ஒரு மனிதனாக கம்பீரிடம் சில பிரச்னைகள் உள்ளன. அவரது ஃபிசியோவே இதை சொல்லியிருக்கிறாரே என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார். 

ஒரு மனிதனாக கம்பீரிடம் சில பிரச்னைகள் உள்ளன என்று அஃப்ரிடி கூறியிருக்கிறார். அதாவது, கோபத்தை தூண்டிவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், சர்ச்சையாகவும், தான் பேசும் பேச்சுக்கு கம்பீர் தக்க பதிலடி கொடுப்பதால், அவருக்கு பிரச்னையிருக்கிறது என்று சொல்கிறார் அஃப்ரிடி. 

அஃப்ரிடி அவரது ஸ்டேட்மெண்ட்டில் ஃபிசியோ என்று சுட்டிக்காட்டியிருப்பது பாடி அப்டான். அவர் இந்திய அணியில் 2009லிருந்து 2011 வரை பணியாற்றினார். அவர், தனது சுயசரிதையில், கம்பீர் மனவலிமை இல்லாதவர். அவர் எப்போதுமே ஒரு பாதுகாப்பற்ற உணர்விலேயே இருப்பார் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்கனவே கம்பீர் விளக்கமளித்து, அதுகுறித்து தெளிவுபடுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேண்டுமென்றே கம்பீரை சீண்டியுள்ளார் அஃப்ரிடி. கம்பீரை சீண்டுவதை தவிர வேற வேலையே இல்ல போல அஃப்ரிடிக்கு...