பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, தனக்கு மிகவும் பிடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் யார் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டரும் சர்ச்சைக்குரிய நபருமான ஷாகித் அஃப்ரிடி, டுவிட்டரில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துவருகிறார். 

அந்தவகையில், ரசிகர் ஒருவர், உங்களுக்கு பிடித்த இந்திய பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தனக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார். 

இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடப்பு இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர்கள் கோலியும் ரோஹித்தும் தான். விராட் கோலி சமகாலத்தின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல ரோஹித் சர்மாவும் மிகச்சிறந்த வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், 264 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோர், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனைகளை நிகழ்த்தும் வீரராக ரோஹித் சர்மா திகழ்கிறார். 

எனவே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பெயர்களை அஃப்ரிடி சொன்னதில் ஆச்சரியமில்லை. அந்த ரசிகர், தற்போதைய இந்திய வீரர்களில் யாரை பிடிக்கும் என கேட்கவில்லை. பொதுவாகத்தான் கேட்டார். ஆனால் அதற்கு கோலி, ரோஹித் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார். காலக்கட்டத்தை சுட்டிக்காட்டாமல் ரசிகர் பொதுவாக கேட்ட கேள்வி என்பதால், சச்சின், டிராவிட் ஆகியோரை அஃப்ரிடி புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.