பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி எப்போதுமே இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீர் குறித்தும் சர்ச்சை கருத்துகளை பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் உள்விவகாரங்களில் தன்னிலை அறியாமல் மூக்கை நுழைத்து அதற்கான சவுக்கடியையும் வாங்கிக்கொள்வார்.

அந்தவகையில் கடந்த மே மாதம் சற்று அதிகப்பிரசங்கித்தனமாக பிரதமர் மோடி குறித்து பேசினார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் அஃப்ரிடிக்கு கண்டனம் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரு கிராமத்திற்கு சென்ற அஃப்ரிடி, இது அழகான ஒரு கிராமம். இங்கு வந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கு வர வேண்டும் என நீண்டகாலமாக நினைத்தேன். இன்றுதான் வர முடிந்தது. உலகமே கொடும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைவிட மோசமான நோய் மோடியின் மைண்ட் தான் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

பிரதமர் மோடி குறித்து பேசியதற்காக அஃப்ரிடிக்கு கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இனியொரு முறை இந்த மாதிரி பேசிவிடாதே என்று எச்சரிக்கை விடும் தொனியில் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவரும் அஃப்ரிடியிடம், இந்தியாவை பற்றி அவர் பேசுவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, உண்மையை பேசும் ஒருவன், எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. எல்லாவற்றையும் விட மனிதமே உயர்வானது என்று நம்புபவன் நான். எனவே எனது கருத்தை தெரிவிப்பதில் எனக்கு எந்த சங்கடமோ தயக்கமோ இல்லை. அது இந்தியா தொடர்பான விவகாரமாக இருந்தாலும் சரி.. என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.