பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, பேட்டிங்கில் மட்டுமல்ல, தனது கருத்தையும் அதிரடியாக தெரிவிக்கக்கூடியவர். 

அந்தவகையில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார் அஃப்ரிடி. தற்போதைய வீரர்களில் உங்களுக்கு பிடித்த நான்கு பேட்ஸ்மேன்கள் யார் என்று ரசிகர் ஒருவர் அஃப்ரிடியிடம் ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, தனக்கு மிகவும் பிடித்த வீரராக விராட் கோலியை தெரிவித்தார். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அஃப்ரிடிக்கு கோலியை ரொம்ப பிடிக்கும் என்பது தெரிந்ததுதான். அதற்கடுத்த இடங்களில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலிய அணியின் சூப்பர் ஸ்டார் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூவரது பெயரையும் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி, பாபர் அசாம், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் என்று வரிசைப்படுத்தியுள்ளார் அஃப்ரிடி. அஃப்ரிடிக்கு பிடித்தமான வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சனின் பெயர் இல்லாதது குறித்து ரசிகர்கள் கேள்வியெழுப்பிவருகின்றனர். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக வலம்வருபவர்களில் வில்லியம்சனின் பெயரை மட்டுமே அஃப்ரிடி விடுத்துள்ளார். கோலி, ரூட், ஸ்மித் ஆகிய மூவரையுமே தனக்கு பிடித்தமான வீரர்கள் பட்டியலில் வைத்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாமும் சிறந்த வீரர். நல்ல டெக்னிக்கை கொண்ட சிறந்த வீரர் அவர். 

கோலி ஒருநாள் போட்டிகளிலும் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளிலும் சாதனைகளை குவித்துவருவதோடு, புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.