உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணிக்கு, அதுவே பெரும் ஏமாற்றமாக அமைந்த நிலையில், சொந்த மண்ணில் இலங்கையிடம் டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது மிகப்பெரிய அடி.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சொந்த மண்ணில் கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு இது மரண அடி. நம்பர் 1 அணியாக திகழும் டி20 ஃபார்மட்டில், முக்கியமான வீரர்கள் இல்லாத இலங்கை அணியிடம் 3 போட்டிகளிலும் தோற்றது பாகிஸ்தான் அணி. 

இந்த படுதோல்வி, அந்த அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற மிஸ்பா உல் ஹக்கை பயங்கர கடுப்பாக்கியது. முக்கியமான வீரர்கள் இல்லாத இலங்கை அணியிடம் ஒயிட்வாஷ் ஆனால், நம்ம எப்படி நம்பர் 1 டி20 டீம்? என கடுமையாக சாடியிருந்தார். பாபர் அசாம் சரியாக ஆடவில்லை என்றால் நமது லெட்சணம் இதுதான் என்றும் மிஸ்பா சாடியிருந்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய குறை என்னவென்று முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அஃப்ரிடி, இலங்கைக்கு எதிராக பவர் ஹிட்டிங் என்ற ஒரு விஷயம் சுத்தமாக மிஸ்ஸாகிவிட்டது. இலங்கைக்கு எதிரான 3 போட்டியிலும் சேர்த்தே பாகிஸ்தான் அணி 2 சிக்ஸர்கள் மட்டுமே அடித்தது. 

எல்லா காலக்கட்டத்திலுமே பாகிஸ்தான் அணியில் பவர் ஹிட்டர்கள் முக்கியமான பங்காற்றியுள்ளனர். அப்துல் ரசாக்லாம் மிகச்சிறந்த பவர் ஹிட்டர். சர்வதேச அளவில் கெய்ல், பொல்லார்டு, தோனி ஆகியோர் அபாரமான பவர் ஹிட்டர்கள். பாகிஸ்தான் அணியில் அந்த மாதிரியான அதிரடி வீரர்கள் தற்போது இல்லை. அணி நிர்வாகம் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார். 

கெய்ல், பொல்லார்டு, தோனி வரிசையில் தன்னடக்கம் கருதி அஃப்ரிடி தனது பெயரை சேர்த்துக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் அணியில் மட்டுமல்லாது, உலகளவில் மிகச்சிறந்த அபாயகரமான அதிரடி வீரர்களில் ஒருவர் அஃப்ரிடி. அவரது அதிரடியான பேட்டிங்கின் காரணமாகவே பூம் பூம் அஃப்ரிடி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அஃப்ரிடி என்பது குறிப்பிடத்தக்கது. அப்பேர்ப்பட்ட அதிரடி வீரருக்கு, தற்போதைய பாகிஸ்தான் அணியில் அதிரடி வீரர் இல்லை என்பது பெரும் வேதனையாக இருக்கத்தானே செய்யும்.