ரசிகர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஷோயப் அக்தரை ஒரு வார்த்தையில் வர்ணித்துள்ளார் ஷாஹித் அஃப்ரிடி.
மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் அக்தர்:
சர்வதேச கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் கொடுத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில், அதிவேக பந்து இவர் வீசியதுதான்(161.3 கிமீ). அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. தனது தோற்றம், பவுண்டரி லைனிலிருந்து ஓடிவரும் வேகம், மிரட்டலான பவுலிங் ஆக்ஷன், அபாரமான வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் அக்தர்.
தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், சங்கக்கரா, ஜெயவர்தனே, கங்குலி, ஜாக் காலிஸ், க்ரேம் ஸ்மித், பீட்டர்சன், டிவில்லியர்ஸ், தோனி ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டியவர் அக்தர்.
இதையும் படிங்க - India vs Sri Lanka: தனது விக்கெட்டை தானே தாரைவார்த்து கொடுத்த மயன்க் அகர்வால்..! ஒரு பந்தில் ஏகப்பட்ட டிராமா
அக்தர் பாகிஸ்தான் அணிக்காக 46 சர்வதேச டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடி, மொத்தமாக 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ள அக்தர், சிறந்த பேட்ஸ்மேன்களையே தனது பவுன்ஸர்கள் மற்றும் மிரட்டலான பவுலிங்கால் தெறிக்கவிட்டவர்.
அக்தர் பற்றி அஃப்ரிடி:
ஆல்டைம் சிறந்த, மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான அக்தரை ஒரு வார்த்தையில் வர்ணிக்குமாறு, அவரது சக வீரரும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுமான ஷாஹித் அஃப்ரிடியிடம் ரசிகர் ஒருவர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, அக்தரை ஒரே வார்த்தைக்குள் அடக்கமுடியாது. அவர் ஒரு புத்தகம். நான் பல்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு தலைமுறைகளில் ஆடியிருக்கிறேன். அதனால் நிறைய ஃபாஸ்ட் பவுலர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அக்தருடைய பலம் என்னவென்றால், அவரது தோற்றமும் துணிச்சலுமே பேட்ஸ்மேன்களை சிதைத்துவிடும். அக்தரை எதிர்கொள்ளும்போது அனைத்து பேட்ஸ்மேன்களுமே ஒருவித அழுத்தத்தை உணர்வார்கள் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
அஃப்ரிடி 1996ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். அக்தர் 1997ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டுவரை ஆடினார். இருவரும் இணைந்து 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
