ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில் வெறும் வேகம் மட்டும் பிரயோஜனமில்லை என்று பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கான சீசனாக அமைந்தது. இந்த சீசனில் ஏகப்பட்ட திறமையான ஃபாஸ்ட் பவுலர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
உம்ரான் மாலிக், மோசின் கான், குல்தீப் சென், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங், அர்ஷ்தீப் சிங், யஷ் தயால் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி அசத்தினர். இவர்களில் உம்ரான் மாலிக், குல்தீப் சென், மோசின் கான் ஆகியோர் அதிவேகமாக வீசினர்.
சன்ரைசர்ஸ் அணியில் ஆடிய உம்ரான் மாலிக் அதிவேகமாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அலறவிட்டார். 157 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்துதான்,ஃபைனலுக்கு முன் வரை சீசனின் அதிவேக பந்தாக இருந்தது. ஃபைனலில் லாக்கி ஃபெர்குசன் 157.3 கிமீ வேகத்தில் வீசி, உம்ரான் மாலிக்கை பின்னுக்குத்தள்ளினார். எனவே சீசனின் 2வது அதிவேக பந்து உம்ரான் மாலிக் வீசியதுதான்.
150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசும் உம்ரான் மாலிக், முன்னாள்வீரர்கள் பலரையும் கவர்ந்த உம்ரான் மாலிக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.
உம்ரான் மாலிக்கின் அதிவேகப்பந்துவீச்சு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதுகுறித்து சர்வதேச கிரிக்கெட்டில் சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான ஷாஹீன் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷாஹீன் அஃப்ரிடி, வெறும் வேகம் எல்லாம் பிரயோஜனமில்லை. அதிவேகமாக பந்துவீசுவதை பற்றியெல்லாம் நான் யோசித்ததே இல்லை. என்னை பொறுத்தமட்டில் வேகத்தை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. சரியான லைன்&லெந்த், ஸ்விங் ஆகியவை இல்லையென்றால் பேட்ஸ்மேன்கள் எளிதாக அடித்துவிடுவார்கள். என்னால் இன்னும் வேகமாக வீசமுடியும் என்று ஷாஹீன் அஃப்ரிடி கூறியுள்ளார்.
