வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவரில் 269 ரன்களை குவித்தது. 

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று முல்தானில் 3வது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் 23 வயதான இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாநவாஸ் தஹானி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி அவருக்கு கேப் கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாநவாஸ் தஹானி, முகமது வாசிம் ஜூனியர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், ஷமர் ப்ரூக்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், ரொமாரியோ ஷெஃபெர்டு, கீசி கார்ட்டி, அகீல் ஹுசைன், கீமோ பால், ஜெய்டன் சீல்ஸ், ஹைடன் வால்ஷ்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமானும் இமாம் உல் ஹக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஃபகர் ஜமான் 35 ரன்கள் அடித்தார். பாபர் அசாம் ஒரு ரன்னிலும், ரிஸ்வான் 11 ரன்னிலும், முகமது ஹாரிஸ் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த இமாம் உல் ஹக் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 117 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி.

ஆட்டத்தின் இடையே புழுதிப்புயலின் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட, 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து படுபாதாளத்தில் கிடந்த பாகிஸ்தான் அணியை குஷ்தில் ஷா - ஷதாப் கான் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் ஆடி கைதூக்கிவிட்டது.

6வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 84 ரன்கள் சேர்த்தனர். குஷ்தில் ஷா 34 ரன்களில் ஆட்டமிழந்தாலும், தனது சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்து அரைசதம் அடித்த ஷதாப் கான் 78 பந்தில்86 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி ஓவரான 48வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் 48 ஓவரில் 269 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.