இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களான கோலி மற்றும் ரோஹித் இடையே பனிப்போர் நடப்பதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிபட்டுவந்தது. 

உலக கோப்பை தோல்வி அதற்கு உரமூட்டியது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த 4ம் வரிசை பேட்ஸ்மேனை 2 ஆண்டுகளாக தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பையில் தோற்று இந்திய ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. உலக கோப்பைக்கு பின்னர் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இந்திய அணி, ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், துணை கேப்டன் என்ற வகையில் ரோஹித்தின் ஆலோசனையை கேட்காமலேயே கேப்டன் கோலி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும் ஒரு தகவல் வந்தது.

மேலும் உலக கோப்பை சமயத்தில் 15 நாட்கள் மட்டுமே குடும்பத்தினரை தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்திருந்தது. ஆனால் கேப்டன் கோலியின் அனுமதியின்றி ரோஹித் சர்மா தொடர் முழுவதும் மனைவி ரித்திகாவை தங்கவைத்திருந்ததாகவும் இதுதொடர்பாக ரோஹித்திடம் கோலி கேட்கப்போய்த்தான் பிரச்னை வந்ததாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பிலிருந்தே ரோஹித் - கோலி பனிப்போர் குறித்து பேசப்பட்டுவருகிறது. எனவே இதுதான் இருவரின் மோதலுக்கு காரணம் என்று கூறமுடியாது.

உலக கோப்பைக்கு பின்னர் இதுதான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலியிடம், ரோஹித்துடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ரோஹித்துடன் எந்த மோதலும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார். 

இந்த சர்ச்சைக்கு பின்னர் ரோஹித்தும் கோலியும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒன்றாக ஆடினர். ரோஹித் - கோலி பனிப்போஎர் குறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர், இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் இதையே தான் பேசிக்கொண்டிருப்பார்கள். நீங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ரோஹித் - கோலி பனிப்போர் குறித்து சேவாக்கிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சேவாக், உண்மையாகவே ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையே இடையே மோதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. அதுவே தெரியாமல் அதுகுறித்து நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் எனக்கு தெரிந்தவரை, அவர்கள் இருவருக்கும் இடையே அப்படியான சண்டை இருப்பதாக தெரியவில்லை என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.