கிரிக்கெட்டில் இருக்கும் டக்வொர்த் லீவிஸ் முறையை இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் தனக்கே உரிய பாணியில் கிண்டலடித்துள்ளார். 

கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றவாறு அந்த சமயத்தில் மாற்றியமைக்கப்படும். அவ்வாறு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்படும் ஸ்கோர் மற்றும் அந்த முறைப்படி அறிவிக்கப்படும் முடிவுகள் பல நேரங்களில், முழு போட்டியை ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்க வேண்டிய அணிக்கு பாதமாகவே அமைந்துள்ளன. 

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டத்தின் பாதியில் நிர்ணயிக்கப்படும் இலக்குகள் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிருப்தியளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி நேற்று பாதியில் தடைபட்டது. மழை குறுக்கீட்டால் நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் ஆடிக்கொண்டிருந்தபோது தடைபட்டது. அதன்பின்னர் நேற்று முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரிசர்வ் நாளான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு வருவதற்கு முன், அதற்கிடைப்பட்ட நேரத்தில் நேற்றே போட்டியை முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மழை வர தொடங்கிய சிறிது நேரத்தில் நின்றிருந்தால் இந்திய அணி 46 ஓவரில் 237 ரன்கள் அடிக்க வேண்டும் என்று டி.எல்.எஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. எஞ்சிய 4 ஓவர்களில் புவனேஷ்வர் குமாருக்கு 2 ஓவர்களும் பும்ராவுக்கு 2 ஓவர்களும் இருந்தன. எனவே அந்த 4 ஓவர்களில் நியூசிலாந்து அணி பெரிதாக ஆடி ஸ்கோரை தாறுமாறாக உயர்த்தியிருக்க முடியாது என்பதே எதார்த்தம்.

ஆனாலும் டக்வொர்த் முறைப்படி, நேற்று போட்டி நடந்திருந்தால் இந்திய அணி 46 ஓவருக்கு 237 ரன்கள் அடித்திருக்க வேண்டும். நீண்டநேரம் மழை பெய்த பிறகு கடைசி வாய்ப்பாக இந்திய அணி, நேற்று கண்டிப்பாக ஆட வேண்டிய சூழல் இருந்தால் கூட, 20 ஓவருக்கு இந்திய அணி 148 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 46 ஓவருக்கு 211 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் அதிகபட்சமாக 250 ரன்கள் அடிக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த விகிதத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் 20 ஓவருக்கு 148 ரன்கள் என்பது மிக அதிகம்.

இவ்வாறு டக்வொர்த் முறை மீது பலருக்கும் அதிருப்தியிருக்கும் நிலையில், சேவாக் தனக்கே உரிய பாணியில் அதை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள சேவாக், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, மழை பெய்யும் போட்டிகளுக்கு மைதான ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படுமா..? ஹெச்.ஆர்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு பதிவிட்டுள்ளார்.