இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது. 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் முன்ரோவும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்கள். முன்ரோ அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை வீணடிக்காமல், வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்ததோடு அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடக்க காரணமாக இருந்தனர். இவர்களின் அதிரடியால் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்கள் அடித்தது. 

204 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஏமாற்றமளித்தாலும், ராகுலும் கோலியும் இணைந்து அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தனர். இவர்களின் அதிரடியால் 10 ஓவரிலேயே இந்திய அணி 115 ரன்களை அடித்தது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ராகுல் 56 ரன்கள் அடித்தார். கோலி 45 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர். 

ராகுல், கோலி, ஷிவம் துபே ஆகிய மூவரும் அடுத்தடுத்த சில பந்துகளில் ஆட்டமிழந்ததால், மீண்டும் விக்கெட்டை இழந்துவிடாமல் ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டேவுடன் இணைந்து அதை செய்தார். மனீஷ் பாண்டே பொறுமையாக ஆடிக்கொண்டிருக்க, சிறிய பார்ட்னர்ஷிப் அமைந்த பின்னர், அடித்து ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். அடித்தளம் நன்றாக அமைக்கப்பட்டிருந்தாலும் கூட, பெரிய இலக்கை விரட்டுகிறோம் என்ற பதற்றமெல்லாம் இல்லாமல் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார் ஷ்ரேயாஸ் ஐயர். 

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 29 பந்தில் 58 ரன்கள் அடித்து 19வது ஓவரிலேயே இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இவையனைத்தையும் விட பெரிய ஹைலைட்டாக, சிக்ஸர் அடித்து போட்டியை முடித்த ஷ்ரேயாஸ் ஐயர், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கால் வெகுவாக கவரப்பட்ட முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், ஷ்ரேயாஸ் ஐயரை வெகுவாக புகழ்ந்துள்ளார். டுவிட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள சேவாக், ஷ்ரேயாஸ் ஐயருக்கு சல்யூட். 204 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டும் வித்தை அனைவருக்கும் தெரியாது. அந்தவகையில் ஷ்ரேயாஸ் ஐயர் அருமையாக ஆடி அந்த இலக்கை விரட்டினார். இது மிகச்சிறப்பான வெற்றி மட்டுமல்லாது நல்ல எண்டர்டெயின்மெயிண்ட்டான போட்டியாக இருந்தது. ராகுலும் கோலியும் வழக்கம்போல தங்களது பணியை செவ்வனே செய்தனர். ஆனால் மிகவும் கவர்ந்தவர் ஷ்ரேயாஸ் ஐயர் தான் என்று அவரை புகழ்ந்துள்ளார் சேவாக்.