உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி இன்னும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. உலக கோப்பை தோல்வியை அடுத்து, அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் உள்ளது. 

தோனி ஓய்வு குறித்து எதுவும் பேசாத நிலையில், தோனியை அணியில் எடுப்பது குறித்து சிந்தக்கவில்லை. எனவே தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது. இல்லையெனில் அவரை ஓரங்கட்ட வேண்டிவரும் என்கிற ரீதியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்த தகவல் வெளியானது. இந்திய அணிக்கு இனிமேல் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர். தோனி 15 பேர் கொண்ட அணியில் வேண்டுமானால் இருப்பார். ஆனால் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பேயில்லை என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளிவந்தது. 

இதன்மூலம் தோனி அவரது ஓய்வு முடிவை அவரே அறிவிக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ நெருக்கடி கொடுப்பது தெரிகிறது. ஆனால் தோனி இதற்கெல்லாம் மசியவேயில்லை. இந்நிலையில், பிசிசிஐயின் செயல்பாடுகளை பார்த்த சேவாக், தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சேவாக், தோனியிடம் நிலைமையை எடுத்துக்கூறுவது தேர்வாளர்களின் கடமை. தோனிக்கு இனிமேல் ஆடும் லெவனில் இடமில்லை என்றால், அதை அவரிடம் நேரடியாக தெரிவித்துவிட வேண்டும். அதன்பின்னர் ஓய்வு குறித்து தோனி முடிவெடுத்து கொள்ளட்டும். ஆனால் அணியில் அவருக்கு இடமில்லை என்பதை அவரிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.