உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பை தொடரில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்கள் அதீத ஆர்வத்தில் உள்ளனர். இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இந்திய அணியை பொறுத்தமட்டில் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் அபாரமாக உள்ளது. 

இந்திய அணியில் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பராக யார் தேர்வாகப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நான்காம் வரிசையை மனதில் வைத்து விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்தது தேர்வுக்குழு. இந்த இரண்டு தேர்வுகளுக்குமே கேப்டன் விராட் கோலி ஆதரவுதான் தெரிவித்தார். 

ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் எடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நம்பிக்கையளிக்கும் விதமாக ஆடியதாலும் அவர் அணியில் இருந்தால் கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சனும் கிடைக்கும் என்பதாலும்தான் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். 

விஜய் சங்கர் அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை நான்காம் வரிசையில் இறக்க வாய்ப்புள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட பல முன்னாள் வீரர்களும் இன்னும் நான்காம் வரிசை குறித்த கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். இருவரில் யார் இறக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆடும் லெவனில் ஒரு பவுலிங் ஆப்சன் கூடுதலாக தேவை என்கிறபட்சத்தில் விஜய் சங்கர் இறக்கப்படலாம். அப்படியில்லை எனில், ராகுல் இறக்கப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகம். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், பல முன்னாள் வீரர்களும் இன்னும் நான்காம் வரிசை பேட்டிங் குறித்த தங்களது கருத்தை தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். ராகுலை இறக்க வேண்டும் என காம்பீர் மற்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் ஆகிய இருவரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். எந்த பேட்டிங் வரிசையையும் இன்னாருக்குத்தான் என்று உறுதி செய்யாமல் சூழலுக்கு தகுந்தவாறு வீரர்களை இறக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு சேவாக் அளித்த பேட்டியில் 4ம் வரிசை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நான்காம் வரிசையில் யாரை இறக்குவது என்பது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும். ஆரம்பகட்ட போட்டிகளில் விஜய் சங்கரை நான்காம் வரிசையில் இறக்கலாம். ஆனால் மிடில் ஆர்டரை பொறுத்தமட்டில் 4,5,6 ஆகிய இடங்களில் இறங்கும் வீரர்கள், அந்த மூன்று இடங்களில், சூழலுக்கு ஏற்றவாறு எதிலும் இறங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.