வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி வீரர்களுக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 22ம் தேதி(வியாழக்கிழமை) தொடங்குகிறது. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், பிசிசிஐக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அந்த ஃபோன் கால்களை அலட்சியப்படுத்தாத பிசிசிஐ, வெஸ்ட் இண்டீஸில் உள்ள இந்திய தூதரை தொடர்புகொண்டு, இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆண்டிகுவா அரசு, இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.